5 மாதத்தில் பழுதான காட்பாடி ரெயில்வே மேம்பாலம்
ரூ.2 கோடியில் சீரமைக்கப்பட்ட காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 5 மாதத்தில்ரூ.2 கோடியில் சீரமைக்கப்பட்டு மீண்டும் குண்டும் குழியுமாகி உள்ளது. எனவே புதிய பாலம் கட்டவேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.2 கோடியில் சீரமைக்கப்பட்ட காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 5 மாதத்தில்ரூ.2 கோடியில் சீரமைக்கப்பட்டு மீண்டும் குண்டும் குழியுமாகி உள்ளது. எனவே புதிய பாலம் கட்டவேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
வேலூர் மாவட்டத்தின் முக்கிய பகுதியாக காட்பாடி திகழ்கிறது. காட்பாடி ரெயில்நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் சித்தூர்- கடலூர் சாலையில் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் மேம்பாலம் என்றே கூறலாம். இந்த மேம்பாலம் வழியாகத்தான் சித்தூர், திருப்பதிக்கு பஸ்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
மேலும், தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் லாரிகள், பஸ்கள் சென்று வருவதால் மேம்பாலம் வலுவிழந்தது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் காணப்பட்டன.
ரூ.2 கோடியில் சீரமைப்பு
இதன் காரணமாக காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதேவேளையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மற்றொரு மேம்பாலம் கட்டவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. சீரமைப்பு பணிக்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது உரிய வசதிகள் இன்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை இருந்தது. குண்டும், குழியுமான சாலையால் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு அல்லல் பட்டனர். எப்போது பணிகள் முடிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒருவழியாக பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 4-ந் தேதி மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது.
5 மாதத்தில் மீண்டும் பழுதானது
பாலம் திறக்கப்பட்டு 5 மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் தென்பட தொடங்கி உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைபாதையில் நடந்து செல்ல முடியாத வகையில் தார்கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். ஆங்காங்கே சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.
ரூ.2 கோடி மதிப்பில் செலவு செய்து சீரமைக்கப்பட்ட பாலம் அவல நிலையில் உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் கடமைக்காக பராமரிக்கப்பட்டதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
புதிய பாலம் கட்ட வேண்டும்
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் முக்கிய பாலமாக உள்ளது. முக்கிய போக்குவரத்து வழித்தடமாக திகழும் பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை. சாலையில் ஏற்படும் பள்ளங்களை பார்க்கும் போது அதிகாரிகளின் அலட்சியம்தான் தெரிகிறது. தற்போது மழை பெய்வதால் இன்னும் சில வாரங்களில் கூடுதலாக பள்ளங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் பாலத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. பாலமும் மெல்ல வலுவிழந்து வருகிறது.
இனி வரும் காலங்களில் பாலத்தினை மீண்டும் பராமரிக்க பாலத்தினை மூடும் நிலை ஏற்பட்டால் போக்குவரத்து ஸ்தம்பித்து போக வாய்ப்பு உள்ளது. எனவே துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த பாலத்தின் அருகே புதிய பாலம் அமைக்க வேண்டும். அந்த பாலம் அமைக்கப்பட்ட பின்னர் பழைய பாலத்தினை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.