கார்த்திகை தீப அகல் விளக்குகள்
கார்த்திகை தீப அகல் விளக்குகள்
கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.
அகல் விளக்குகள்
மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.
விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
ரெடிமேடு விளக்குகள்
இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.
இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
நிவாரணம்
ஈரோடு மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:-
குலாலர் சமுதாயத்தினர் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். அதில் ஒரு மாவட்டத்துக்கு குறைந்தது 10 ஆயிரம் பேர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விநாயகர் சிலை, கார்த்திகை தீப அகல் விளக்குகள், பொங்கல் மண் பானைகள் தயாரித்து வருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரத்து 500 நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 330 பேருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்த தொழிலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் 50 சதவீதம் பேர் வேலை செய்து வருகிறார்கள். எங்களுக்கு மழைக்கால நிவாரணம் கிடைப்பதில்லை. நலவாரியத்தில் மண்பாண்ட தொழில் செய்யும் உறுப்பினர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
அனுமதி
ஏரிகளில் மண் எடுக்க மண்பாண்ட தொழிலாளர்களுக்கு எந்த கட்டுபாடுமின்றி கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பயிற்சி நிலையம் ஏற்படுத்தி கொடுத்து வருங்கால மண்பாண்ட தொழிலாளர்கள் நவீன தொழில் பழகுவதற்கு அரசு முன்வர வேண்டும். தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஏரிகளில் தண்ணீர் அதிகமாக உள்ளதால், களிமண் எடுக்க முடிவதில்லை. ஒரு டிராக்டருக்கு ரூ.7 ஆயிரம் செலுத்தி களிமண் எடுத்து வந்து, விளக்குகள், பானைகள் செய்ய வேண்டியுள்ளது. விற்பனைக்கு கொடுக்கும்போது விற்பனையாளர்கள் எங்களிடம் குறைந்த விலைக்கு கேட்கிறார்கள். நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதால் இருப்பு வைத்து திருவிழா காலங்களில் பொருட்களை விற்பனை செய்ய முடிவில்லை.
கொரோனா காலத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கி இருந்ததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது பருவமழை தொடங்கியதால் மண்பாண்ட தொழில் செய்ய முடியாமல் பெரும் சிரமப்படுகிறோம். எந்த இடங்களிலும் தேவையான அளவு கார்த்திகை தீபம் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்பட எங்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை.
பொங்கல் பானை
இத்தகைய சூழ்நிலையில் சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு விளக்குகள் இறக்குமதி செய்வதும், ஆன்லைன் மூலமாக விளக்குகளை விற்பனை செய்வதும் எங்களது தொழில் வளர்ச்சி பெறுவதை தடுக்கிறது. எங்களது தொழில் நலிவடைந்து இருப்பதால் நவீன கருவிகளை வழங்கியும், சூளை வைக்கும் இடத்துக்கு பட்டா வழங்கியும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தைகள், அரசு சார்ந்த வணிக வளாகங்களில் மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அமைக்க அனுமதி அளித்தால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையின்போது கரும்பு, சர்க்கரை, வேட்டி-சேலை வழங்கப்படுவதைபோல ரேஷன் கடைகளில் பொங்கல் பானையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
களிமண் கிடைப்பதில்லை
கோபி அருகே பெரிய மொடச்சூரை சேர்ந்த நாகராஜ் கூறியதாவது:-
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் மண் விளக்குகள், மண் அடுப்பு, பானை ஆகியவற்றை தயாரித்து வருகிறேன். சீன அச்சு விளக்குகளால் எங்களுக்கு விற்பனை பாதிப்பு இல்லை. பொதுமக்கள் மண் விளக்குகளை அதிகமாக விரும்பி வாங்கி செல்கிறார்கள். ஓடத்துறை, காவிலிபாளையம் ஆகிய குளங்களில் களிமண் எடுத்து வந்து பொருட்களை தயார் செய்கிறோம். ஆனால் மழை பெய்த காரணத்தினால் 2 குளங்களிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அதனால் களிமண் கிடைப்பதில்லை.
ஏற்கனவே வைத்திருந்த களிமண்ணை வைத்து அகல் விளக்குகளை தயார் செய்து வருகிறோம். மழை பெய்ததால் தற்போது விளக்கு அதிகமாக தயார் செய்ய முடிவதில்லை. கடந்த ஆண்டு ஆயிரம் விளக்குகள் கொண்ட மூட்டை ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1,100-க்கு விற்பனையாகிறது. இந்த விளக்குகள் ஈரோடு, கோபி, அவினாசி, பெருந்துறை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மழை காரணமாக தொழில் நலிவடைந்த இருப்பதால் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு
அந்தியூரில் அகல் விளக்கு உற்பத்தி செய்யும் சசிகலா கூறியதாவது:-
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக உள்ளது. அகல்விளக்கு உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களும் கிடைப்பதில்லை. அச்சு விளக்குகள் அதிகமாக விற்பனைக்கு வந்தாலும் நாங்கள் கைகளால் தயாரிக்கும் அகல் விளக்குகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. கோவில்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் வைப்பதற்காக அதிக அளவில் கைகளால் செய்யப்படும் விளக்குகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
சிறிய அகல் விளக்கு ஒன்று ஒரு ரூபாய்க்கும், பெரியது ரூ.2 முதல் ரூ.10 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
புத்துயிர்
சோலார் அருகே லக்காபுரம் மேற்கு வீதியை சேர்ந்த அகல்விளக்கு விற்பனையாளர் சுந்தராம்பாள் கூறியதாவது:-
மொடக்குறிச்சி வட்டாரத்தில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் அவல்பூந்துறை குளத்தில் மண் எடுக்கிறார்கள். ஆனால் அங்கு தண்ணீர் அதிகமாக தேங்கி இருப்பதால் மண் எடுக்க முடிவதில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குறுக்கப்பட்டி கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகளை மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து லக்காபுரம், 46 புதூர், சோலார் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம்.
உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும்போது வண்டி வாடகை சேர்த்து ஆயிரம் அகல் விளக்கிற்கு ரூ.1,150 செலவாகிறது. ஆண்டுக்கு 5 ஆயிரம் விளக்குகள் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இங்கு சில்லறை விற்பனையில் ரூ.10-க்கு 6 அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. சற்று பெரிய விளக்கு மற்றும் ஒருமுக விளக்கு, 5 முக விளக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் கார்த்திகை தீப திருநாளில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சீன நாட்டு விளக்குகளை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துவதில்லை. பழமைக்கு பெயர்போன மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
களிமண்ணால் செய்யப்படும் அகல் விளக்குகளுக்கு மட்டுமே பொதுமக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. ஆனாலும், மழை காரணமாக களிமண் கிடைப்பதில் சிரமம், காய வைக்க முடியாத நிலை, எரியூட்டுவதற்கு சூளை அமைக்க முடியாத நிலை இருப்பதால் விளக்குகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நலிவடையும் நிலையில் உள்ள தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சிறப்பு திட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.