நாள்தோறும் விமானத்தில் வெளிநாடு பறக்கும் சத்தியமங்கலம் மல்லிகை - வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படுமா?


தினத்தந்தி 25 Dec 2022 2:29 AM IST (Updated: 25 Dec 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

நாள்தோறும் விமானத்தில் வெளிநாடு பறக்கும் சத்தியமங்கலம் மல்லிகை - வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படுமா?

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சந்தன மர கடத்தல் வீரப்பன். மற்றொன்று சத்திமங்கலம் மல்லிகைப்பூ.

சத்தியமங்கலத்தில் ஒரு புறம் மலைப்பகுதி. மற்றொரு புறம் சமவெளி பகுதி. இந்த சமவெளி பகுதியில் வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காக்கடா, செண்டுமல்லி, பட்டு்ப்பூ உள்பட மலர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

சத்தியமங்கலம் பகுதியில் தொடக்க காலத்தில் விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் பூத்த பூக்களை ஆங்காங்கே விற்பனை செய்து வந்தனர். இதில் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளை இணைத்து கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தை (பூ மார்க்கெட்) உப்புபள்ளத்தை சேர்ந்த செல்லப்பன் தொடங்கினார்.

2 ஆயிரம் உறுப்பினர்கள்

தொடக்கத்தில் சில நூற்றுக்கணக்கான விவசாயிகளே உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சங்கத்தில் உள்ளனர்.

இதனால் சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், கோம்புபள்ளம், தாண்டம் பாளையம், பகுத்தம்பாளையம், புதூர், வடவள்ளி, பண்ணாரி, ராஜன் நகர், பீர்க்கடவு, கொண்டப்ப நாயக்கன்பாளையம், செண்பகப்புதூர், நல்லூர், புஞ்சைபுளியம்பட்டி, கோபி உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து உள்ளனர். இதில் மல்லிகைப்பூ மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. முல்லை பூ சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு தினமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

சத்தியமங்கலம் பகுதியில் விளையும் மல்லிகைப்பூவுக்கு தனி மவுசு உண்டு. காரணம் இங்கு விளையும் மல்லிகைப்பூக்கள் அதிக நறுமணம் மிக்கதாக இருக்கும். எனவே தமிழகம் மட்டுமின்றி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மல்லிகைப்பூக்களை ஏலம் எடுத்து செல்வர். அதுமட்டுமின்றி இங்கு ஏலம் எடுக்கப்படும் மல்லிகைப்பூக்கள் பதப்படுத்தப்பட்டு புதுடெல்லி, மும்பை உள்பட இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கும், அமெரிக்கா, ஜிந்தா, சார்ஜா உள்பட பல வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சீசன் காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் தினசரி 30 டன் பூக்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்படும், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலம் என்பதால் 1 முதல் 2 டன் பூக்களே விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதேவேளையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூவுக்கான தேவை அதிக அளவில் இருக்கும். எனவே டிசம்பர், ஜனவரி மாதங்களில் வியாபாரிகள் போட்டி போட்டி பூக்களை ஏலம் எடுப்பார்கள். இதன்காரணமாக பூக்கள் விலை அதிகரித்து காணப்படும்.

2 லட்சம் தொழிலாளர்கள்

சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க (பூ மார்க்கெட்) தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-

இந்த பூ மார்க்கெட் கடந்த 1991-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சத்தியமங்கலம் பகுதியில் பூ பறிக்கும் தொழிலில் சுமார் 2 லட்சம் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பூக்கள் அதிக அளவில் விளையும்போது போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பூக்களை வீணாக அருகில் உள்ள பள்ளத்தில் கொண்டு கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பூக்கள் வீணாவதை தடுக்கவும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் தடுக்கவும் சத்தியமங்கலம் பகுதியில் வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அதிக அளவில் விளையும் பூக்களை தொழிற்சாலை நிர்வாகம் வாங்கி கொள்ளும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் விவசாயிகளுக்கு பூக்களுக்கு உண்டான நியாயமான விலையும் கிடைக்கும்.

எனவே சத்தியமங்கலம் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலையை விரைந்து அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 11 ஆண்டுகளாக தனியார் இடங்களில் தான் மாத வாடகைக்கு பூ மார்க்ெகட் இயங்கி வருகிறது. ஆகவே விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பூ மார்க்கெட்டுக்கு 1 ஏக்கர் இடம் அரசு ஒதுக்கி கொடுக்க வேண்டும். அவ்வாறு இடம் கிடைக்கும் பட்சத்தில் பூ மார்க்கெட்டை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஜயலட்சுமி

சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயி விஜயலட்சுமி கூறுகையில், 'எங்கள் பெரிய குளம் பகுதியில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பங்கி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளார்கள். சம்பங்கி பூ தினமும் அதிக அளவில் பூக்கும். இதன்காரணமாகவே இங்கு விவசாயிகள் இதை அதிக அளவில் சாகுபடி செய்து உள்ளனர். பல நாட்கள் சம்பங்கி பூக்கள் கிலோ 10 ரூபாய்க்குத்தான் விலை போகும். இப்படி விலைபோனால் சம்பங்கி பூ சாகுபடிக்காக முதலீடு செய்த பணமே எங்களுக்கு கிடைக்காது. இதனால் பூக்களை நாங்கள் வீணாக பள்ளத்தில் கொட்டிவிட்டு வருத்தத்தோடு செல்வோம். விலை குறைவாக இருக்கிறது என செடியில் இருந்து சம்பங்கி பூக்களை பறிக்காமல் விடமுடியாது. அவ்வாறு பூக்களை பறிக்காமல் விட்டால் புதிய பூக்கள் பூக்காது. மேலும் பூ பறிக்கும் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து விட்டது. உரங்களின் விலையும் உயர்ந்து விட்டது. எனவே பூக்களுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அதுமட்டுமின்றி சத்தியமங்கலம் பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்தினால் விவசாயிகள் பயன் அடைவார்கள்,' என்றார்.

ஸ்ரீதர்

அக்கரை நெகமம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஸ்ரீதர் கூறுகையில், 'நான் ½ ஏக்கரில் காக்கடா பூ சாகுபடி செய்து உள்ளேன். காக்கடா பூ துளியும் வாசனை இல்லாத பூ ஆகும். 3 நாட்கள் ஆனாலும் பூ வாடாது. மல்லிகைப்பூ மார்க்கெட்டுக்கு குறைவாக வரும்போது அதற்கு பதிலாக காக்கடா பூ அதிக விலைக்கு ஏலம் கூறி வியாபாரிகள் எடுத்துச் செல்வார்கள்.

மல்லிகைப்பூ அதிக அளவு மார்க்கெட்டுக்கு வந்தால் காக்கடா பூ அதிக விலைக்கு போகாது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவுக்கு மல்லிகைப்பூ விற்பனை ஆகும்போது காக்கடாவுக்கு அதிக விலை கிடைக்கும். வாசனை திரவியம் தொழிற்சாலை அமைந்தால் விவசாயிகளுக்கு நல்லது,' என்றார்.

எஸ்.பி.துரைசாமி

வெள்ளியம்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி எஸ்.பி.துரைசாமி கூறுகையில், 'தோட்டத்தில் ½ ஏக்கரில் முல்லை பூ பயிரிட்டு உள்ளேன். தற்போது முல்லை பூ நல்ல விலைக்கு போகிறது. சீசன் காலங்களில் 25 கிலோ வரை முல்லை பூ பூக்கும். பனிக்காலங்களில் 3 கிலோ வரைதான் பூ பூக்கும். ஏலம் முடிந்ததும் விவசாயிகளுக்கு சங்க நிர்வாகிகள் பணத்தை ரொக்கமாக கொடுத்து விடுகிறார்கள். பணம் எங்களுக்கு உடனே கிடைப்பதால் மகிழ்ச்சி. மேலும் பூ மார்க்கெட் வந்த பின்னர் தான் ராஜன் நகர், பீர்க்கடவு, கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம் போன்ற பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் பூ செடிகளை பயிர் செய்ய முன் வந்தோம். வாசனை திரவியம் தொழிற்சாலை அமைந்தால் விவசாயிகளுக்கு பயன் உண்டு,' என்றார்.

பூபதி

இக்கரை நெகமத்தை சேர்ந்த பூபதி என்ற விவசாயி கூறுகையில், 'நான் என்னுடைய தோட்டத்தில் 2 ஏக்கரில் மல்லிகைப்பூ பயிரிட்டு உள்ளேன். தினமும் காலை 6 மணிக்கு பெண்கள் பூக்களை பறிப்பார்கள். அவைகளை ஒன்று சேர்த்து காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக எடுத்து சென்று விடுவேன். இந்த நேரத்தில் தான் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் அதிக விலை கொடுத்து மல்லிகைப்பூவை வாங்குவார்கள். ஏனென்றால் உடனே மல்லிகைப்பூவை பதப்படுத்தி கோவைகளில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு அனுப்புவதற்காக வாங்குவார்கள். காலை 9 மணிக்கு மேல் சென்றால் மல்லிகைப்பூ விலை குறைந்து விடும்.

சீசன் காலங்களில் 2 ஏக்கரில் 100 கிலோ மல்லிகைப்பூ கிடைக்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனி காரணமாக 2 கிலோதான் மல்லிகைப்பூ விளையும். சத்தியமங்கலம் பகுதியில் வாசனை திரவியம் தொழிற்சாலை அமைந்தால் சீசன் காலங்களிலும் மல்லிகைப்பூவுக்கு உரிய விலை கிடைக்கும்,' என்றார்.


Next Story