தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?- ரசிகர்கள் கருத்து


தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?- ரசிகர்கள் கருத்து

ஈரோடு

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.

மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

சுகமான நினைவுகள்

அம்மா அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.

காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.

100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.

இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.

விரல் நுனியில் தொழில்நுட்பம்

சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.

தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.

விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

இளைஞர்களின் வருகை குறையவில்லை

ஈரோடு அபிராமி தியேட்டர் உரிமையாளர் என்.எஸ்.எஸ்.செந்தில்நாதன்:-

தியேட்டரில் திரைப்படம் பார்க்கும் ஆர்வம் மக்களிடையே எப்போதும் குறையாது. காலத்துக்கு ஏற்ப ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. மாடர்னாக உள்ள தியேட்டர்களை நோக்கி ரசிகர்கள் செல்கிறார்கள். செல்போன்களில் எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும், தியேட்டரில் திரைப்படம் பார்க்கும் ரசனை கிடைக்காது என்பதால் இளைஞர்களின் வருகை குறையவில்லை. ஆனால் குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. அவர்கள் சிறந்த படமாக இருக்கிறதா என்று ரிவியூ பார்த்துவிட்டு படத்துக்கு வருகிறார்கள்.

எத்தனை ஆண்டுகளானாலும் இந்த தொழில் இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தியேட்டர்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதிநவீன புரொஜக்டர்கள், சவுண்ட் டிராக் உணர்வு என ஒலி, ஒளி அமைப்பில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் எடுக்கும் காட்சிகளை அப்படியே தத்ரூபமாக திரையில் கண்டு ரசிக்க முடிகிறது.

பெரிய படங்களுக்கு மட்டும் கூட்டம் வருகிறது. சிறிய படங்களுக்கு 10 சதவீதம் நபர்கள் மட்டுமே வந்து பார்க்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது பணியாளர்களுக்கு சம்பளம், மின்சார கட்டணம் போன்ற செலவுகளால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகள் இருந்தால் மட்டுமே சமாளிக்க முடிகிறது.

தின்பண்டங்களின் விலை சென்னை போன்ற நகரங்களில் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் எங்களது தியேட்டர்களில் நியாயமான விலையில் விற்பனை செய்கிறோம். ஒரு பாப்கான் ரூ.40-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

டிக்கெட் கட்டணத்தை குறைப்பதற்கு தமிழக அரசுதான் உதவி செய்ய வேண்டும். ஒரு டிக்கெட்டுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், 8 சதவீதம் மாநில அரசின் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த 8 சதவீத வரி வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. எனவே 8 சதவீத வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. வரியையும் மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் டிக்கெட் கட்டணம் குறையும்.

கட்டணத்தை குறைக்கவேண்டும்

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த யோகா ஆசிரியை கற்பகம் கூறியதாவது:-

நாங்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு அடிக்கடி சென்று சினிமா பார்ப்பது வழக்கம். எனது மூத்த மகன் நடிகர் தனுஷ் மற்றும் 2-வது மகன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். குறிப்பாக முதல் காட்சியை சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு நான் எப்போதும் தடையாக இருந்ததில்லை. சினிமாவில் காட்டப்படும் சிறந்த கருத்துகளை தெரிந்து கொள்வது நல்லது. அதையே வாழ்க்கையாக இன்றைய தலைமுறையினர் எடுத்து கொள்ளக்கூடாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று படம் பார்க்கும் சூழல் இருந்து வந்தது. ஆனால் இன்றைய தினம் ஒரு படத்துக்கு குடும்பத்துடன் சென்றால் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது. குறிப்பாக டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் தின்பண்டங்களின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே அனைத்து தரப்பு மக்களும் படங்களை பார்க்கும் வகையில் டிக்கெட் கட்டணத்தையும், தின்பண்டங்களின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் தியேட்டர்களின் பயன்படுத்துவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தியேட்டர்களை அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக வைத்து கொள்வது வரவேற்கத்தக்கது.

முறைப்படுத்த வேண்டும்

ஈரோடு திருநகர்காலனியை சேர்ந்த நதியா:-

நான் அழகுசாதன நிலையம் வைத்து நடத்தி வருகிறேன். அதனால் தியேட்டருக்கு எப்போதாவது செல்வது உண்டு. ஒருகாலத்தில் எந்த படம் வருகிறது என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால் தற்போது வாரத்துக்கு 2, 3 படங்கள் ரிலீஸ் ஆகிறது. பிரபல நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் மட்டுமே தெரிய வருகிறது. இதனால் அந்த படத்துக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்து செல்வதே தெரிவதில்லை. 10 பேர், 15 பேருடன் காட்சிகளை நடத்துவதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே படங்கள் வெளியிடும் எண்ணிக்கையை முறைப்படுத்தினால் அதிகமானோர் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வாய்ப்பு உள்ளது.

பொருளாதார பிரச்சினை

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், தொழில் அதிபருமான சன்ரைஸ் சிவகுமார்:-

வேலைப்பளு, பொருளாதார பிரச்சினை போன்றவை திரையரங்குக்கு சென்று சினிமா பார்ப்பதற்கு பெரிய தடையாக உள்ளது. போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதனால் ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் பஸ் பயணம் செல்லும் போதும், சில இடங்களில் காத்துக் கொண்டிருக்கும் போதும் தங்களுக்கு வேண்டிய திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் அவற்றை பார்த்துக் கொள்கின்றனர்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு

சென்னிமலையை சேர்ந்த சி.என்.நடராஜன்:-

நான் சிறு வயதாக இருந்தபோது சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு நண்பர்களுடன் சைக்கிளிலேயே சென்று சினிமா பார்ப்பேன். ஒரே சினிமாவை பலமுறை பார்த்த காலம் உண்டு. அன்றைய காலகட்டங்களில் சினிமா மட்டுமே பொழுது போக்காக இருந்தது. தற்போது பல தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களில் ஏராளமான திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருவதால் தியேட்டர்களுக்கு சினிமா பார்க்க செல்லும் ஆர்வம் பலருக்கும் குறைந்துவிட்டது. ரசிகர்களை கவர்வதற்காக தற்போது சினிமா தியேட்டர்களில் குளிர்சாதன வசதி, சொகுசு இருக்கைகள் என ஆடம்பர வசதிகள் செய்துள்ளனர். அப்படி இருந்தும் கூட்டம் குறைவாகவே உள்ளது. குறைந்தது 10 பேர் வந்தால் தான் டிக்கெட்டே கொடுக்கின்றனர். இல்லாவிட்டால் அந்த காட்சியை ரத்து செய்து விடுகின்றனர்.

செல்போனிலேயே கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பழைய படங்கள், புதுப்படங்கள் என அனைத்தையும் பார்த்து விடுகின்றனர். இது போன்ற நவீன வளர்ச்சிகளால் சினிமா தியேட்டர்கள் மட்டுமின்றி கிராமங்களில் ஊர் மக்கள் அனைவரும் இரவு நேரத்தில் ஒன்று கூடி ஊர் கதை பேசுவதும், திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உறவினர்கள் ஒன்று சேர்ந்து உரையாடுவதும் குறைந்துவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story