கவிநாடு கண்மாய் தடுப்பு சுவரில் விரிசல்; சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


புதுக்கோட்டையில் கவிநாடு கண்மாய் தடுப்பு சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

கவிநாடு கண்மாய்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, குளங்கள், கண்மாயில் மிகப்பெரியது கவிநாடு கண்மாய் ஆகும். புதுக்கோட்டை திருவப்பூர் அருகே அமைந்துள்ள இந்த கவிநாடு கண்மாயில் தண்ணீர் கடல் போல் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த கண்மாய் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது. விவசாயத்திற்கு பெரும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த கண்மாயில் கடந்த ஆண்டு (2021) முழு கொள்ளளவை எட்டியதின் மூலம் மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய இந்த கண்மாயை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து ரசித்தனர். மேலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்தது. மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறியதால் பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்தனர். சுமார் 10 நாட்களுக்கு மேலாக திருவிழா போல் காணப்பட்டது.

தடுப்பு சுவரில் சேதம்

இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு மழை அதிகம் பெய்தால் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயரும். கவிநாடு கண்மாய்க்கும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கண்மாயின் தடுப்பு சுவரில் ஒரு பகுதியில் விரிசல் பெரிய அளவில் காணப்படுகிறது. கரையை பலப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த தடுப்பு சுவரில் மேல் பகுதியில் இருந்து தரைத்தளம் வரையும், அதன் பக்கவாட்டிலும் விரிசல் உள்ளது.

இதேபோல் மதகுகள் அமைந்துள்ள பகுதிக்கு இறங்கி செல்லக்கூடிய படிக்கட்டுகளின் மேல்தளத்திலும் விரிசல் காணப்படுகிறது. இதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தனபதி கூறுகையில், ''கவிநாடு கண்மாய் மூலம் பாசனம் பெறும் பகுதி அதிகமாகும். இந்த கண்மாயில் தடுப்பு சுவர் சேதமடைந்திருப்பதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவிநாடு கண்மாயில் கரை உடைந்து தண்ணீர் வெளியேறினால் பாதிப்பு அதிகம் ஏற்படும். எனவே இதனை சீரமைக்க வேண்டும்'' என்றார்.


Next Story