மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சித்திரை வீதிகளில் வாகனங்களுக்கு தடை-மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சித்திரை வீதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சித்திரை வீதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
வாகனங்களுக்கு தடை
மதுரை சித்திரை வீதி உள்ளிட்ட மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி உள்ள வீதிகளில் குடியிருப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் மகேஷ், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2009-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள 4 சித்திரை வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கோவில் வாகனங்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், போலீசாரின் வாகனங்கள் மட்டும் அந்த வீதிகளில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வீதிகளில் குடியிருப்பவர்கள், பக்தர்களின் வாகனங்களை அனுமதிப்பதில்லை.
இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் நாங்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகி வருகிறோம். எங்களின் நலன் கருதி, கோவிலைச்சுற்றி உள்ள 4 சித்திரை வீதிகளிலும் மோட்டார் சைக்கிள்கள், கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்க மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பாதுகாப்பு கருதி தடை
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோவிலை சுற்றி சித்திரை வீதிகளில் வாகனங்களை அனுமதிக்காமல் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் உளவுத்துறை அறிக்கை அளித்தது. அதன்பேரில் பொதுமக்கள் மற்றும் கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சித்திரை வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு கொள்கை முடிவை எடுத்து செயல்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
தள்ளுபடி
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட தேவையில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.