கீரமங்கலம் பட்டவய்யனார் கோவில் சாலையில் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீரமங்கலம் பட்டவய்யனார் கோவில் சாலையில் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரமங்கலம் பட்டவய்யனார் கோவில் வழியாக கீரமங்கலம் மேற்கு, அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் இணையும் சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் சென்று வருகிறார்கள். இந்த சாலை மிகவும் பழுதடைந்ததால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். அதேபோல் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் மழைநீர் குளங்களுக்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த பழைய கல்பாலம் உடைந்து பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சுற்றி சென்றன.
இந்த நிலையில் தற்போது இப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மழைநீர் குளங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கல்பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் அமைக்காமல் சாலைப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். மேலும் புதிதாக போடப்படும் சாலைகளில் உடைப்புகளும் ஏற்படலாம். எனவே அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.