காதலியால் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்பட்ட குமரி மாணவர் கொலை வழக்கை தமிழகத்துக்கு மாற்ற கேரள போலீஸ் முடிவு மாணவரின் தந்தை எதிர்ப்பு


காதலியால் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்பட்ட குமரி மாணவர் கொலை வழக்கை தமிழகத்துக்கு மாற்ற கேரள போலீஸ் முடிவு மாணவரின் தந்தை எதிர்ப்பு
x

குமரி மாணவரை அவரது காதலியே கொன்ற வழக்கை தமிழகத்திற்கு மாற்ற கேரள போலீஸ் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு கொல்லப்பட்ட மாணவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

திருவனந்தபுரம்:

குமரி மாணவரை அவரது காதலியே கொன்ற வழக்கை தமிழகத்திற்கு மாற்ற கேரள போலீஸ் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு கொல்லப்பட்ட மாணவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாணவரை கொன்ற காதலி

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்தார்.

ஷாரோன்ராஜிம், கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் ஷாரோன்ராஜிக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் காதலனை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து அவர் கொன்றது விசாரணையில் அம்பலமானது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கேரள போலீசார் ஈடுபட்ட போது திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள போலீஸ் விசாரணை

மேலும், இந்த வழக்கில் தடயங்களை அழிக்க உதவியதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமாரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதலில் இந்த வழக்கின் விசாரணையை பாறசாலை போலீசார் மேற்கொண்டனர். ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியதாக ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜன் குற்றம்சாட்டினார். பின்னர் இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு தான் காதலி கிரீஷ்மா மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்ட இடமான காதலி வீடு குமரி மாவட்டத்தில் உள்ளது. இதனால் மேற்கொண்டு ஆதாரத்தை சேகரிக்க கேரள போலீசார் கிரீஷ்மா வீட்டுக்கு வந்து விசாரணை நடத்த வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்திற்கு மாற்ற முடிவு

இதற்கிடையே பாறசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் ஒரு ஆடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், மாணவர் கொலை வழக்கின் விசாரணை பாதிப்பதை போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மந்திரி ஆன்றனிராஜூ தெரிவித்துள்ளார். இதனால் கேரள போலீசாருக்கு இந்த வழக்கை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதனால் இந்த வழக்கை மேற்கொண்டு சிறப்பாக நடத்த தமிழக போலீசாரிடம் ஒப்படைத்து விடலாமா? என கேரள போலீசார் முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக சட்ட நிபுணர்களின் கருத்தையும் கேட்டுள்ளனர்.

மாணவர் தந்தை எதிர்ப்பு

ஆனால் இதற்கு கொல்லப்பட்ட ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், "எனது மகனுக்கு நடந்த பிரேத பரிசோதனையின் முழு அறிக்கையும் எங்களுக்கு கிடைக்க வேண்டும். கேரள குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் கிரீஷ்மா தான் கசாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து கொன்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாறசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.

எனவே எனது மகன் தனது இறுதி வாக்குமூலத்தில் கூறிய ஆடியோ பதிவுகளை வெளியிட வேண்டும். மேலும் கடந்த 14-ந் தேதி முதல் மரண படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த எனது மகன் ஷாரோன் ராஜ் உடல் நலிவுற்ற நிலையிலும் தனது காதலி கிரீஷ்மாவுடன் போனில் பேசியுள்ளான். அதில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டறிய வேண்டும்.

மேலும் அவர்களது வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றமும் செய்துள்ளனர். அதன் விவரங்களையும் வெளியிட வேண்டும். பாறசாலை போலீசார் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. ஆனால் தற்போது திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தொடர் விசாரணை தமிழக போலீசாருக்கு மாற்றப்பட்டால் அது சரியான விசாரணையாக இருக்காது" என்றார்.


Next Story