மதனகோபாலசுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை


மதனகோபாலசுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை
x

மதனகோபாலசுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை நடந்தது.

பெரம்பலூர்

சக்தி ரூபமான பார்வதி சிவனை நினைத்து 21 நாட்கள் விரதம் (உபவாசம்) இருந்து சிவனின் மற்றொரு பாதியாக (உமையொருபாகனாக) ஐக்கியமானார். இந்த நம்பிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளியையொட்டி வரும் அமாவாசைக்கு முன்னதாக விரதம் இருந்து அமாவாசை தினத்தில் விரதத்தை நிறைவு செய்து அம்பாளை பூஜை செய்தால் சிவசக்தி அருளால் வீட்டில் சகல சவுபாக்கியங்கள் பெருகும், கணவன்-மனைவி இடையேயும், குடும்பத்திலும் நல்லுறவு மேம்படும் என்பது ஐதீகம் ஆகும். இதன்படி பெரம்பலூரில் உள்ள மதனகோபாலசுவாமி கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருமாள்-தாயாருக்கு சிறப்பு வழிபாடும், தாயார் சன்னதியில் அமாவாசையையொட்டி கேதார கவுரி பூஜையும் நடந்தது. இதில் மதனகோபாலசுவாமிக்கு வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மரகதவல்லித்தாயார் சன்னதியில் கேதார கவுரி பூஜை நேற்று விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு அம்பாள் சிலை அக்ரகாரத்தில் உள்ள கோவில் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயணஅய்யர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு, அங்கிருந்து மரகதவல்லித்தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு, விநாயகர் பூஜை, அஷ்டோத்திரபூஜை நடைபெற்றது. கேதாரகவுரிபூஜையின் மகத்துவம் குறித்து பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. பூஜைகளை மணிகண்டன் அய்யர் நடத்தினார். பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான ஒப்பந்ததாரர் கண்ணன், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை லதா உள்பட திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேங்காய், பழம் நிவேதனம் செய்து அம்பாளை வழிபட்டனர்.

இந்நிலையில் நேற்று சூரியகிரகணம் ஏற்பட்டதால், 2 பிரிவுகளாக பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் நடை பகல் 12.30 மணி அளவில் சாத்தப்பட்டது. பூஜையின்போது மஞ்சள் சரடு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதனை பெண்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச்சென்று வலது கையில் அணிந்து கொண்டனர்.

இதற்கிடையே கோவிலில் தாயார் சன்னிதியின் அர்ச்சகர் திடீரென்று சன்னிதியின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கேதார கவுரி பூஜையை நடத்தவிடாமல் அவமதிக்கும் அர்ச்சகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில் செயல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.


Next Story