வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84 குறைந்தது


வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84 குறைந்தது
x

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84 குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை தினமும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதி அன்றும் மாற்றி வருகிறது.

இந்த நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலை மட்டும் ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

அந்த வகையில் நாடு முழுவதும் நேற்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் சென்னையில் ரூ.84 குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டது.

விலையில் மாற்றம் இல்லை

அதன்படி வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் புதிய விலை ரூ.1,937 ஆகும். வணிக சிலிண்டர்கள் தொடர்ந்து குறைந்து வருவதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் பேக்கரி தொழில் செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வணிக சிலிண்டர் விலை குறைந்த போதிலும், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த சில மாதங்களாக வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக நீடித்து வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Next Story