ராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவி ஆம்னி வேனில் கடத்தல்-7 பேர் கைது


ராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவி ஆம்னி வேனில் கடத்தல்-7 பேர் கைது
x

ராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவியை ஆம்னி வேனில் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்:

அரசு பள்ளி மாணவி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பெரக்கரநாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் கந்தசாமி (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவரின் உறவினரான லாரி டிரைவர் ஒருவர் ஆயில்பட்டி அருகே வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கட்டிட மேஸ்திரி கந்தசாமி, லாரி டிரைவரின் 15 வயது மகளான அரசு பள்ளி 10-ம் வகுப்பு மாணவியை கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த உறவினர்கள் மாணவிக்கு அறிவுரை கூறினர். இதனால் மாணவி கந்தசாமியை பிரிந்து, தனது உறவினர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

கடத்தல்

ஆனால் கந்தசாமி தன்னுடன் வந்துவிடுமாறு மாணவியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கந்தசாமி ஒரு கும்பலுடன் ஆம்னி வேனில் மாணவி தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த மாணவியை ஆம்னி வேனில் கடத்தி சென்றனர்.

இதை அறிந்த மாணவியின் உறவினர்கள் ஆம்னி வேனை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் வேனில் இருந்த மாணவியை மீட்டதோடு, ஆயில்பட்டி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

ராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவியை ஆம்னி வேனில் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கட்டிட மேஸ்திரி கந்தசாமி, வெங்கடாஜலம் (32), மணிகண்டன் (33), ராஜி (42), சடையன் (50), தமிழரசன் (30) மற்றும் முள்ளுக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த பழனிசாமி (44) ஆகிய 7 பேரை ஆயில்பட்டி போலீசார் போக்சோ, குழந்தை திருமணம், ஆள் கடத்தல் போன்ற சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை கொரோனா பரிசோதனைக்காக நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆயில்பட்டி போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 7 பேரும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story