கண்ணில் மிளகாய் பொடி தூவி கொ.ம.தே.க. இளைஞரணி தலைவர் காரில் கடத்தல்-மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


கண்ணில் மிளகாய் பொடி தூவி கொ.ம.தே.க. இளைஞரணி தலைவர் காரில் கடத்தல்-மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பள்ளிபாளையம் அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி கொ.ம.தே.க. இளைஞரணி தலைவர் காரில் கடத்தப்பட்டார். அவரை கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

கொ.ம.தே.க. இளைஞரணி தலைவர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29). கவுதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கவுதம், நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு, பாதரையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள், கவுதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.

கடத்தல்

இதையடுத்து அந்த மர்ம கும்பல் தாங்கள் வந்த காரில் கவுதமை ஏற்றி, அங்கிருந்து மின்னல் வேகத்தில் கடத்தி சென்றது. இரவு வெகுநேரமாகியும் கவுதம் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி திவ்யபாரதி, அவரது செல்போனை தொடர்பு கொண்டார். அப்போது பேசிய மர்மநபர், 'நாங்கள் கவுதமை கடத்திவிட்டோம்' என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதி இதுகுறித்து உடனடியாக வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் அருகே கவுதமின் செருப்புகள், மோட்டார் சைக்கிள் கிடந்ததால் அவர் கடத்தப்பட்டதுஉறுதியானது.

2 பேரிடம் விசாரணை

இதுகுறித்து அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டின் அருகே மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனிடையே திவ்யபாரதியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், 'தனது கணவரின் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேர் வரவு செலவு கணக்குகளில் முறைகேடு செய்தனர். இதனால் எனது கணவர் அவர்களை கண்டித்தார். இதன் காரணமாக அவர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது' என தெரிவித்தார்.

இந்த தகவலின் பேரில் கவுதமின் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 ஊழியர்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 தனிப்படைகள்

இதனிடையே கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார்.தனிப்படையினர் நிதி நிறுவன வரவு செலவு பிரச்சினையில் கவுதம் கடத்தப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியால் கடத்தப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கடத்தல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். கொ.ம.தே.க. இளைஞணி தலைவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பாதரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story