ஒகேனக்கல் அருகே ரூ.80 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிப்ஸ் கடைக்காரர் மீட்பு-சேலத்தை சேர்ந்த 5 பேர் கும்பலிடம் விசாரணை


ஒகேனக்கல் அருகே ரூ.80 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிப்ஸ் கடைக்காரர் மீட்பு-சேலத்தை சேர்ந்த 5 பேர் கும்பலிடம் விசாரணை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல் அருகே ரூ.80 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிப்ஸ் கடைக்காரர் மீட்கப்பட்டார். அவரை கடத்திய சேலத்தை சேர்ந்த 5 பேர் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிப்ஸ் கடைக்காரர்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூத்தப்பாடி மடம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 37). இவர் மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மஞ்சுளா (30). மகளிர் சுய உதவிக்குழு கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு திரும்பிய விஸ்வநாதன், பின்னர் மும்பைக்கு செல்லவில்லை. அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி அவர், ஒகேனக்கல் அருகே உள்ள பென்னாகரத்துக்கு செல்வதாக மனைவி மஞ்சுளாவிடம் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவருடைய செல்போன் எண்ணை பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டல்

இதனிடையே விஸ்வநாதனின் எண்ணில் இருந்து, அவருடைய தம்பி பூபதி செல்போனுக்கு, அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்ம நபர், விஸ்வநாதனை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.80 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பணத்தை கொடுக்கவில்லை என்றால், அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு, செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்தார். இதுகுறித்து பூபதி, மஞ்சுளாவிடம் தெரிவித்தார்.

இதனால் பதறிப்போன அவர், ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடத்தப்பட்ட விஸ்வநாதனை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது.

5 பேர் கும்பல் சிக்கியது

இந்த தனிப்படையினர் கடத்தப்பட்ட விஸ்வநாதனை மீட்க தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவருடைய செல்போன் சிக்னலை கண்காணித்தனர். அப்போது விஸ்வநாதன் சேலம் மாவட்டம் ஓமலூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓமலூர் விரைந்த போலீசார் அங்கு விஸ்வநாதனை மீட்டனர்.

மேலும் அவரை கடத்திய ஓமலூர், காடையாம்பட்டி, மேட்டூரை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் போலீசில் சிக்கியது. அவர்களை தர்மபுரி அழைத்து வந்து, தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒகேனக்கல் அருகே ரூ.80 லட்சம் கேட்டு, சிப்ஸ் கடைக்காரர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story