லோடு ஆட்டோவில் கடத்திய3,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


லோடு ஆட்டோவில் கடத்திய3,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு லோடு ஆட்டோவில் கடத்திய 3,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 3 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.

ரேஷன்அரிசி கடத்தல்

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த லோடு ஆட்டோவில் தலா 40 கிலோ எடை கொண்ட 90 மூட்டைகளில் மொத்தம் 3 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, கடத்தப்பட்டது தெரியவந்தது.

வாலிபர் கைது

இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டம் பெருமாங்குழியை சேர்ந்த ஞானசீலன் மகன் மெர்லின் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மகன்கள் கிருஷ்ணன் என்ற கிட்டு, பெரியசாமி ஆகியோர் ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்துவதற்காக அனுப்பியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கிருஷ்ணன் என்ற கிட்டு, பெரியசாமி ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story