ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் மீட்பு


ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் மீட்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 2022-09-23T00:30:40+05:30)

பாலக்கோட்டில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் மீட்கப்பட்டான். இதுதொடர்பாக சொகுசு காருடன் 7 பேர் சிக்கினர்.

தர்மபுரி

பாலக்கோடு:-

பாலக்கோட்டில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் மீட்கப்பட்டான். இதுதொடர்பாக சொகுசு காருடன் 7 பேர் சிக்கினர்.

பாலிடெக்னிக் மாணவர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். நிதி நிறுவன அதிபர். இவருடைய மகன் சாம்சரண் (வயது 17). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வருகிறார்.

தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாம்சரண் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் பேசிய நபர், சாம்சரணுடன் படிக்கும் நபர் என்று கூறினார். அப்போது வீட்டை விட்டு வெளியே வரும்படி சாம்சரணிடம் கூறுகிறார்.

காரில் கடத்தல்

சாம்சரணும் வீட்டை விட்டு வெளியே வருகிறார். அங்கு ஒரு சொகுசு காரில் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சாம்சரண் வந்தவுடன், அந்த நபர்கள் சாம்சரணை கட்டாயப்படுத்தி காருக்குள் இழுத்து போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் கடத்தி சென்றனர். அதிகாலை 4.30 மணி அளவில் சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது.

இதற்கிடையே காலையில் பொழுது விடிந்ததும் மகனை காணாமல் சிவக்குமார் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். சாம்சரணின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சிவகுமார் குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

காலை 8 மணி அளவில் சிவக்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், உங்களது மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். உயிரோடு வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதைக்கேட்டு சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

என்னசெய்வது என்பது தெரியாமல் திகைத்த அவர், நடந்த விவரங்களை குடும்பத்தினரிடம் கூறினார். பின்னர் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சாம்சரணை கண்டுபிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.

மாணவர் மீட்பு

சிவக்குமாரிடம் பேசிய நபர், எந்த இடத்தில் இருந்து பேசினார் என்று செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் அடிக்கடி இடத்தை மாற்றியதால் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்தது.

நேற்று முன்தினம் இரவு சூளகிரி பகுதியில் தொடர்ந்து ஒரே இடத்தில் மர்மநபரின் செல்போன் எண் சிக்னல் காட்டியது. அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கு ஒரு சொகுசு காரில் 7 பேர் இருந்தனர். அவர்களுடன் சாம்சரணும் இருந்தார். உடனே போலீசார் சாம்சரணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

7 பேர் சிக்கினர்

சாம்சரணை கடத்தி வைத்திருந்த 7 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலக்கோடு, அக்ரஹார தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (23), அவருடைய கூட்டாளிகள் அமாணிமல்லாபுரத்தை சேர்ந்த அருண்குமார் (33), கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த விஜி (30), அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), சூளகிரி பகுதியை சேர்ந்த முரளி (32), அளேசீபம் பகுதியை சேர்ந்த முருகேசன் (38), உத்தனபள்ளியை சேர்ந்த கோகுல் (30) ஆகிய 7 பேர் என்பது தெரிய வந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் தப்பி சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிடிபட்ட 7 பேரும் கூலி தொழிலாளர்கள்தான். இவர்களுக்கு சொகுசு கார் எப்படி கிடைத்தது. பணம் பறிக்கும் நோக்கத்துடன்தான் இவர்கள், சாம்சரணை கடத்தினார்களா? அல்லது வேறு ஏதாவது நோக்கமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


Next Story