காரில் கடத்தப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு


காரில் கடத்தப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு
x

கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காதல் விவகாரம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராஜா-சுகந்தி ஆகியோரின் மகன் முருகன் (வயது 24).

இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். முருகன், சுமிகா ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே அதற்கு சுமிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

8 பேர் கைது

கடந்த மாதம் 18-ந்தேதி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூடங்குளத்தில் வீடு எடுத்து தங்கினர். சம்பவத்தன்று இரவு அவர்கள் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இதை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து சுமிகாவை தாக்கி இழுத்து சென்று காரில் கடத்தி சென்றனர். அதை தடுத்த முருகனின் பெற்றோரை அவர்கள் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுமிகாவின் உறவினரான அமுதா, அனுசுயா, பாப்பா, தங்கம்மாள், செல்வகுமார், விஜயகுமார், வைகுண்டமணி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். சுமிகா, அவரது பெற்றோரை தேடி வந்தனர்.

கேரளாவில் மீட்பு

இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கூடங்குளம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர்.

அப்போது, திருவனந்தபுரத்தில் முருகேசனின் உறவினர் வீட்டில் சுமிகாவை பெற்றோர் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சுமிகாவை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் அவரது பெற்றோரான முருகேசன், பத்மா மற்றும் உறவினர் அனுசியா ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

கணவருடன் செல்ல சம்மதம்

பின்னர் அவர்கள் 4 பேரையும் ராதாபுரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் சுமிகா தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவரை கணவர் முருகன், மாமியார் சுகந்தி ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் கைதான முருகேசன், பத்மா, அனுசியா ஆகியோர் நெல்லையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story