வாலிபரை கடத்தி தாக்குதல்
மயிலாடுதுறையில் காதல் திருமண விவகாரம் தொடர்பாக வாலிபரை கடத்தி தாக்கியது தொடர்பாக மாவீரன் வன்னியர் சங்க தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மயிலாடுதுறையில் காதல் திருமண விவகாரம் தொடர்பாக வாலிபரை கடத்தி தாக்கியது தொடர்பாக மாவீரன் வன்னியர் சங்க தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
காதல் திருமணம்
மயிலாடுதுறை மாருதி நகரை சேர்ந்தவர் ரிக்கப்சந்த். இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மகள் சோனல்குமாரி (வயது19). இவரும் மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் பாலச்சந்தர் (20) என்பவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே ரிக்கப்சந்த் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சோனல்குமாரியும், பாலச்சந்தரும் கடந்த 5-ந் தேதி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அப்போது சோனல்குமாரி தன்னுடைய விருப்பப்படியே பாலச்சந்தரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
கோர்ட்டு உத்தரவு
இதனையடுத்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனல்குமாரியையும் பாலச்சந்தரையும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, சோனல்குமாரி 18 வயது நிரம்பியவர் என்பதால் அவர் விருப்பப்பட்ட இடத்தில் வசிக்கலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் பாலச்சந்தரின் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.
கடத்தி தாக்குதல்
இந்தநிலையில் பாலச்சந்தரின் குடும்ப நண்பர் மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் சாலியத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை கடந்த 7-ந்தேதி அவரது வீட்டில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. பின்னர் ராஜேஷ் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேஷ் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் தன்னை கடத்திச்சென்று மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்ததாகவும், அப்போது மாவீரன் வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து, காதல் திருமணம் செய்து கொண்ட சோனல்குமாரியும், பாலச்சந்தரும் எங்கே இருக்கின்றனர் என்று கேட்டு தன்னை அடித்து தாக்கி, சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.