ரூ.70 லட்சம் கேட்டு தொழில் அதிபர் காரில் கடத்தல்; 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
கீரனூரில் சினிமா பாணியில் ரூ.70 லட்சம் கேட்டு காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபரை 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தொழில் அதிபர் கடத்தல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 63). தொழில் அதிபரான இவர் 50 டேங்கர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் அதிகாலை நடைபயிற்சி செல்வது வழக்கம். அதே போல் நேற்று அதிகாலை 5 மணிக்கு சந்திரசேகரன் வீட்டில் இருந்து புறப்பட்டு நடைபயிற்சி சென்றார்.
கீரனூர்-குன்றாண்டார் கோவில் ரோட்டில் நாஞ்சூர் பிரிவு ரோட்டில் சென்றபோது அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. அதன்பின் அவரது மகன் மணிகண்டனுக்கு அந்த கும்பல் செல்போனில் அழைத்து பேசியுள்ளனர். மேலும் தந்தையை கடத்தி விட்டதாகவும் ரூ.70 லட்சம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.
செல்போன் சிக்னல்
இதையடுத்து போலீசார் உஷாராகி வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ளவர்களிடம் விசாரித்ததில் சந்திரசேகரனை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது உறுதியானது.
இதைத்தொடர்ந்து மணிகண்டனின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பை வைத்து போலீசார் விசாரித்தனர். மேலும் அதன் சிக்னல் எங்கு காண்பிக்கிறது என்பதை கண்காணித்தனர். இதில் அந்த செல்போன் எண் திருச்சி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருச்சி விரைந்தனர்.
7 பேர் கும்பல் சிக்கியது
இதற்கிடையில் போலீசார் தங்களை பின்தொடர்ந்து வருவதை அறிந்ததும் அந்த கும்பல் திருச்சி அருகே பெரிய சூரியூர் பகுதியில் சந்திரசேகரனை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச்சென்றது. காலை 11.30 மணியளவில் சந்திரசேகரனை பெரிய சூரியூரில் போலீசார் பத்திரமாக மீட்டு கீரனூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவரை கடத்திய கும்பலை பிடிக்க மற்றொரு தனிப்படையினர் விரைந்தனர்.
சினிமா பட பாணியில் கடத்தல் கும்பலை விரட்டி சென்ற போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 7 பேர் கும்பல் சிக்கியது. 2 பேர் தப்பியோடினர். இதையடுத்து, அவர்கள் 7 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் பறிமுதல்
விசாரணைக்கு பின் அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து கீரனூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழில் அதிபரை கடத்தி மிரட்டி பணம் கேட்ட கும்பலை சினிமா பட பாணியில் போலீசார் துரத்தி சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தப்பட்ட நபர் 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
காரில் போலீஸ் ஸ்டிக்கர்
தொழில் அதிபர் சந்திரசேகரனை கடத்தி காரில் ஏற்றியதும், அவரது முகத்தை துணியால் மூடி அந்த கும்பல் மறைத்துள்ளது. மேலும் காரில் வைத்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி, சுற்றி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிக்கிவிடுவோம் என கருதிய பின் அவரை விட்டு தப்பியிருக்கின்றனர். காரில் தொழில் அதிபரை கடத்தி செல்லும் போது போலீசார் பிடித்து விடாமல் இருப்பதற்காக காரின் முன்பகுதியில் போலீஸ் என எழுதப்பட்ட ஸ்டிக்கரைஒட்டியிருக்கின்றனர்.
கிராம நிர்வாக உதவியாளர் சிக்கினார்
தொழில் அதிபரை கடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், ''தொழில் அதிபர் சந்திரசேகரன் வீடு வாடகைக்கு விட்டு வருகிறார். அவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த களமாவூரை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் மயில்வாகனன் பின்னர் வீட்டை காலி செய்திருக்கிறார். அவர் முன்பணமாக கொடுத்த தொகையை சந்திரசேகரன் திருப்பி கொடுக்கவில்லையாம். இதேபோல் சந்திரசேகரனிடம் கார் டிரைவராக பணியாற்றிய ராஜ்குமாருக்கு சம்பள பாக்கியும் வைத்திருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட இவர்கள் கீரனூர் பகுதியை சேர்ந்த வாலிபர்களிடம் சந்திரசேகரனிடம் பணம் நிறைய இருப்பதாகவும், அவரை கடத்தினால் பணம் கிடைக்கும் என கூறியிருக்கின்றனர். இதனால் வாலிபர்கள் சிலர் சேர்ந்து அவரை கடத்தியிருக்கின்றனர். இந்த வழக்கில் கிராம நிர்வாக உதவியாளரும் கைது செய்யப்படுகிறார்'' என்றனர்.