சேத்தியாத்தோப்பு அருகே சோகம் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
சேத்தியாத்தோப்பு அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
சேத்தியாத்தோப்பு, மார்ச்.29-
சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தான்.
குளம் அருகே விளையாடினான்
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி. இவர்களது மகன் ஸ்ரீராம் (வயது 3). இவன், பூதங்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கூடம் சென்று விட்டு, மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தான்.
பின்னர் திரவுபதி அம்மன் கோவில் குளம் அருகில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் அவன் வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோர் தேடி சென்றனர். அப்போது, அங்கு அவன் இல்லை. பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை.
முதலையால் தேடும் பணி பாதிப்பு
இதையடுத்து, சோழத்தரம் போலீசுக்கு தகவல் தொிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சிறுவன் அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், அதன் உள்ளே இறங்கி தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த குளத்தில் முதலை ஒன்று கிடந்தது. இதனால் அவர்கள் குளத்தை விட்டு வெளியே வந்தனர். இதனால் சிறுவனை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
மீன்வலை வீசி உடலை மீட்டனர்
தொடர்ந்து, மீனவர்களை வரவழைத்து மீன் பிடிக்கும் வலையை வீசி, சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 11 மணியளவில் சிறுவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நோில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சிறுவன் குளத்தில்தவறி விழுந்து இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.