சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது


சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
x

சிறுமியை கடத்தி திருமணம்; போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி:

சிறுமியுடன் திருமணம்

மணப்பாறை தரங்கம்பட்டி வையமலைபாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன். இவருடைய மகன் நடராஜ் (வயது 24). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் திருச்சி கே.கே. நகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது, நடராஜ் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த மாதம் கரூருக்கு அழைத்துச்சென்று அங்குள்ள விநாயகர் கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்துள்ளார்.

பின்னர், அவருடைய அண்ணன் வீட்டுக்கு அழைத்துச்சென்று ஒருநாள் கணவன்-மனைவியாக வாழ்ந்துள்ளனர். அதன்பிறகு, பெற்றோருக்கு பயந்து, அந்த சிறுமி தாலியை கழற்றிவிட்டு, தனது வீட்டுக்கு வந்துவிட்டார். இதற்கிடையே கடந்த 24-ந்தேதி கோவிலுக்கு புறப்பட்டு வந்த சிறுமியை, நடராஜ் காரைக்குடியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்துள்ளார். சிறுமியை காணாத அவருடைய தாய், இது பற்றி திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் சிறுமியை நடராஜ் ஏற்கனவே திருமணம் செய்ததும், தற்போது அவரை காரைக்குடியில் தங்க வைத்து இருந்ததும் தெரியவந்தது.

போக்சோவில் வாலிபர் கைது

இதைத்தொடர்ந்து அந்த வழக்கு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, காரைக்குடியில் இருந்த சிறுமியை மீட்ட போலீசார், சிறுமியை திருமணம் செய்த நடராஜ் மீது, பலாத்காரமாக பெண்ணை திருமணத்துக்காக கடத்துதல், போக்சோ சட்டம், குழந்தை திருமணம் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story