கோழிப்பண்ணை அதிபரை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்


கோழிப்பண்ணை அதிபரை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்
x

வேலூரில் கோழிப்பண்ணை அதிபரை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

கோழிப்பண்ணை அதிபர்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பனமடங்கியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனது கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு தீவனம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் சரக்கு ஆட்டோவில் வேலூர் வந்தார். கொணவட்டம் அருகே வந்தபோது இரவு 8 மணி அளவில் அவரை 5 பேர் கொண்ட கும்பல் திடீரென மடக்கினர். சரக்கு ஆட்டோவை சுரேஷ் நிறுத்தியதும் உடனடியாக கத்தியை காட்டி சுரேஷை மிரட்டி ஆட்டோவில் இருந்து அவரை வெளியே இழுத்து, ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச் சென்று, தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் தீவனம் வாங்க வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்தனர். சுரேஷ் வசதியானவர் என்று கருதிய மர்மநபர்கள் அவரின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படி சுரேஷின் செல்போனில் இருந்து அவரது குடும்பத்தினரிடம் சுரேஷை பேசச்சொல்லி பணம் கேட்டு மிரட்டினர். அப்போது அவர்கள் ரூ.2 லட்சம் பணம் தந்தால் தான் அவரை விடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

3 பேர் கைது

இதைக்கேட்டதும் சுரேஷின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மர்மநபர்கள் கூறிய இடத்துக்கு உறவினர்கள் கூட்டாக சென்றனர். அவர்களை கண்டதும் மர்மநபர்கள் சுரேஷை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து சுரேஷை உறவினர்கள் மீட்டனர். அவர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சுரேஷை கடத்தியது கொணவட்டத்தை சேர்ந்த பாஷா (37), ரியாஸ் (32), சித்திக் (36), முனீர், நரேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முனீர், நரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். சுரேஷிடம் பறிக்கப்பட்ட ரூ.20 ஆயிரம் முனீரிடம் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story