வாலிபரின் கல்லீரல்-சிறுநீரகம் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட திருப்பத்தூரை சேர்ந்த வாலிபரின் கல்லீரல், சிறுநீரகத்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் கோவைக்கு எடுத்து சென்றனர்.
சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட திருப்பத்தூரை சேர்ந்த வாலிபரின் கல்லீரல், சிறுநீரகத்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் கோவைக்கு எடுத்து சென்றனர்.
சாலை விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள மோட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மகன் திவாகர் (வயது 27). பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 23-ந் தேதி இவர் ஜோலார்பேட்டையில் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த அவர் தடுப்புச்சுவரில் மோதினார். இதில் திவாகருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திவாகரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூளைச்சாவு
இதைத்தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் திவாகருக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால், மூளைச்சாவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதுகுறித்து டாக்டர்கள் திவாகரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து திவாகரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் திவாகரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் திவாகரின் தலை பாகங்களை தவிர உடலில் உள்ள இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை எடுத்து கொள்ளுங்கள். என் மகன் உயிருடன் இல்லை என்றாலும், அவனுடைய உடல் உறுப்புகள், உயிரோடு இருப்பவர்களுக்கு, உயிர் வாழ உதவட்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், உடல் உறுப்பு தானத்தை முறையாக பதிவு செய்தனர்.
அறுவை சிகிச்சை
தொடர்ந்து கோவையை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் இருந்து, கார்த்திக் மதிவாணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று தர்மபுரிக்கு வந்து திவாகரின் உடல் உறுப்புகளை பரிசோதனை செய்தனர். இதில் இதயம் அறுவை சிகிச்சை செய்து எடுத்து சென்றால் பொருத்துவதற்கான பலன் இல்லாத நிலையில் இருந்துள்ளது. இதனால் இதயத்தை தவிர கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து மருத்துவக்குழுவினர் கோவைக்கு எடுத்து சென்றனர்.
முன்வர வேண்டும்
தமிழக முழுவதும் விபத்துகளில் மூளைச்சாவு ஏற்படுகின்றவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெற அரசு முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறது. இதுபோன்று விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டு சுயநினைவை இழப்பவர்கள், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று திவாகரின் பெற்றோர் தெரிவித்தனர்.