வாலிபரை கொன்று கிணற்றில் வீச்சு
காளையார்கோவில் அருகே வாலிபரை கொன்று பிணத்தை கிணற்றில் வீசியது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே வாலிபரை கொன்று பிணத்தை கிணற்றில் வீசியது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
வாலிபர் மாயம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குமரன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மகி என்ற மகேசுவரன் (வயது 23). இவர் கடந்த 25-ந் தேதி நண்பர்களான கீழவளையம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், மனோஜ்குமார் (23) ஆகியோருடன் அருகில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று மது குடித்ததாகவும், அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே மகேசுவரனின் தாயார் பாண்டிமீனாள், இது குறித்து காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடினர். மகேசுவரனை அழைத்து சென்ற நண்பர்களில் ஒருவரான மனோஜ் குமாரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்தது அம்பலம்
விசாரணையில், தகராறு காரணமாக நண்பர்கள் இருவரும் மகேசுவரனை கொலை செய்துவிட்டு, அவரது உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று கண்மாய் அருகேயுள்ள கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.
பின்னர் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்து மகேசுவரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை காளையார்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மகேசுவரன் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், மனோஜ்குமார் ஆகியோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.