விவசாயியை கொன்று உடல் புதைப்பு?


விவசாயியை கொன்று உடல் புதைப்பு?
x

நெல்லிக்குப்பம் அருகே விவசாயியை கொன்று உடல் புதைக்கப்பட்டதா? என்று மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47), விவசாயி. இவருக்கு விஜயலட்சுமி எனற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜசேகர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிடம் ராஜசேகர் எங்கு சென்றுள்ளார் என்று கேட்டனர். அதற்கு அவர் வெளியூருக்கு சென்ற கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நானும் அவரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி வந்தார். ஆனால் இது தொடர்பாக போலீசில் விஜயலட்சுமி புகார் கொடுக்கவில்லை.

மனைவியிடம் போலீஸ் விசாரணை

இதனால் சந்தேகமடைந்த சிலர், இதுபற்றி நடுவீரப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விஜயலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே விஜயலட்சுமியை வீட்டிற்கும், அருகாமையில் இருந்த விளைநிலத்திற்கும் அழைத்துச் சென்றனர். அப்போது நிலத்தில் சந்தேகப்படும்படியாக சில தடயங்கள் இருந்தது. இதை கண்ட போலீசாருக்கு ராஜசேகர் கொலை செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கொலையா?

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜசேகர் மாயமான விவகாரத்தில் மர்மம் உள்ளது. விஜயலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். ராஜசேகரை அடித்து கொலை செய்து நிலத்தில் புதைத்து இருக்கலாம் என எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இன்று (திங்கட்கிழமை) வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சந்தேகம் உள்ள இடத்தை தோண்டி பார்த்தால் மட்டுமே ராஜசேகர் கொலை செய்யப்பட்டாரா? என தெரியவரும். அதன்பிறகே மாயமான ராஜசேகர் பற்றி முழு தகவல் தெரியும் என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story