கள்ளக்குறிச்சியில் தாய், 2 குழந்தைகள் படுகொலை: கடனை செலுத்தாததால் வீட்டை அபகரிக்க திட்டமிட்டு கொன்றது அம்பலம் பெண் உள்பட 5 பேர் கைது- பரபரப்பு தகவல்


கள்ளக்குறிச்சியில் தாய், 2 குழந்தைகள் படுகொலை: கடனை செலுத்தாததால் வீட்டை அபகரிக்க திட்டமிட்டு கொன்றது அம்பலம் பெண் உள்பட 5 பேர் கைது- பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் தாய், 2 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடனை செலுத்தாததால் வீட்டை அபகரிக்க திட்டமிட்டு கொன்றது அம்பலமாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் வளர்மதி (வயது 37). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சென்னையை சேர்ந்த செல்வம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் செல்வமும், அந்த பெண் குழந்தையும் விபத்தில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வளர்மதி சென்னையை சேர்ந்த குப்புசாமியை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய மகன் தமிழரசன்(11).

இந்த நிலையில் குப்புசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார். அப்போது இவருக்கும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி பாலக்கொல்லையை சேர்ந்த திருமணமான மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து இவர்கள் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நரிமேடு பகுதியில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதற்கிடையே அவர் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்த 2-வது மாதத்தில் வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி வளர்மதி அவரது மகன் தமிழரசன், 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், திருமேனி ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் சொத்துக்காக உறவினரே வளர்மதியை கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

ரூ.22 லட்சத்தை திருப்பி தர மறுப்பு

வளர்மதியின் தந்தை ரங்கநாதனுக்கு 4 மனைவிகள். இதில் 2-வது மனைவி அஞ்சலையின் மகள் வளர்மதி ஆவார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டுவதற்காக வளர்மதி, உறவினர் செங்குறிச்சியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி விமலா என்ற அஞ்சலையிடம்(50) ரூ.22 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர் கடன் தொகையை திருப்பி தரவில்லை. இதனால் வளர்மதியிடம், விமலா தனக்கு தர வேண்டிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், நீங்கள் பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது, பணம் தரமுடியாது என்று கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விமலா, வளர்மதி மற்றும் அவருடைய 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டால், அந்த இடம் மற்றும் வீடு தனக்கு சொந்தமாகிவிடும் என முடிவு செய்தார்.

கொலை செய்ய சதித்திட்டம்

இதற்காக ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் சுப்பிரமணியனின் மகன்கள் தமிழ்ச்செல்வன் (27), பூபாலன் (30) ஆகியோரை தொடர்பு கொண்டு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 17-ந்தேதி இரவு 9 மணியளவில் விமலா மற்றும் பூபாலன், தமிழ்செல்வன், இவரது நண்பர் நாகை மாவட்டம் கடலங்குடியை சேர்ந்த நாகராஜன் மகன் ராமு (24), சின்னப்பன் மகன் சிவா (39) ஆகியோர் வளர்மதியின் வீட்டுக்கு சென்றனர். வளர்மதியின் வீட்டின் அருகே பூபாலன், சிவா ஆகியோர் நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என்று நோட்டமிட்டனர்.

3 பேர் கொலை

முதலில் விமலா கதவை தட்டினார். வளர்மதி கதவை திறந்ததும், உள்ளே சென்ற விமலா நலம் விசாரிப்பது போல் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து சைகை காட்டினார். உடனே தமிழ்செல்வனும், ராமுவும் வீட்டுக்குள் செல்லவும், அஞ்சலை வெளியில் கதவு தாழ்ப்பாளை போட்டு விட்டார்.

பின்னர் தமிழ்செல்வன் மற்றும் ராமு ஆகியோர் சேர்ந்து வளர்மதியை தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த தமிழரசன் எழுந்து சத்தம் போட்டதும் அவனையும், 8 மாத கைக்குழந்தையையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் மோப்பநாய் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

5 பேர் கைது

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விமலா, தமிழ்ச்செல்வன், ராமு, பூபாலன், சிவா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story