மலைவாழ் குடியிருப்பில் தொற்று நோய்கள் தாக்கம் அதிகரிப்பு
குழிப்பட்டி மலைவாழ் குடியிருப்பில் தொற்று நோய்கள் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மருத்துவ முகாம் நடத்தப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
குழிப்பட்டி மலைவாழ் குடியிருப்பில் தொற்று நோய்கள் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மருத்துவ முகாம் நடத்தப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
மலைவாழ் குடியிருப்பு
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாரு, ஆட்டு மலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, வேல் குருமலை, கருமுட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேவைகள் வனத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் சுகாதாரம், பாதைவசதி உள்ளிட்டவை முழுமையாக பூர்த்தி அடையாததால் மலைவாழ் மக்கள் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
தொற்று நோய்கள் தாக்கம் அதிகரிப்பு
இந்த சூழலில் பனிக்காலத்துக்கு பின்பு கோடைகால தொடக்கத்தில் ஏற்பட்ட பருவநிலை மற்றும் தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது. அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். அதன்படி உடுமலை வனச்சரகத்தில் உள்ள குழிப்பட்டி மலைவாழ் குடியிருப்பிலும் தொற்று நோய்கள் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் சுகாதாரம் சார்ந்த சேவையை பெறுவதற்கு அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து அடிவாரத்தை அடைந்து அதன் பின்பு வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டி உள்ளதால் பொதுமக்கள் மருத்துவ சேவையை பெறுவதில் பின்னடைவை சந்தித்தும் உடல் நலம் பாதித்தும் வருகின்றனர்.
மருத்துவ முகாம்
எனவே சுகாதாரத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குழிப்பட்டி உள்ளிட்ட ஆனைமலை புலிகள் காப்பக மலைவாழ் கிராமங்கள் தோறும் ஆய்வு மேற்கொண்டு தொற்று நோய்கள் தாக்கம் அதிகமாக உள்ள பகுதியில் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு முன் வர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.