கீரனூர் அணைக்கட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
கீரனூர் அணைக்கட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தனா்.
செஞ்சி,
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வரும் கீரனூர் அணைக்கட்டு பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு படர்ந்திருந்த கோரை புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவரிடம் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கீரனூர் அணைக்கட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். கால்வாயில் படர்ந்திருக்கும் கோரை செடிகள், மணலை அகற்ற வேண்டும். சாத்தனூர் அணை கால்வாயை நந்தன் கால் வாயுடன் இணைக்க முயற்சி மேற் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் ராஜாராமன் மற்றும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் சுரேஷ், சேகர், வெற்றி தமிழ்ச்செல்வன், கன்னிகா ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.