அலகுமலை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளர்கள் இடையே வாக்குவாதம்


அலகுமலை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளர்கள் இடையே வாக்குவாதம்
x
திருப்பூர்


பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவிப்போர் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராமசபை கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானங்களை ஏற்க போவதில்லை என்றும், இதனை ஏற்று சம்மதம் தெரிவித்து கையெழுத்திடப்போவதில்லை என்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சேர தெரிவித்தனர்.

ஏற்கனவே அலகுமலை ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதனை முழுமையாக நிறைவேற்றாத அரசு நிர்வாகத்தை கண்டித்தும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நிறுத்தி வைப்பு

ஆனால் பொதுமக்கள் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து கிராம சபை கூட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நேற்று ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசின் சார்பாக 22 தீர்மானங்களும், மேலும் 4 தீர்மானங்கள் என மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இருதரப்பினர் இடையே வாக்குவாதம்

அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரு தரப்பினர் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்றும், ஒரு தரப்பினர் நடத்தியே தீர்வோம் என்றும் கூறினர். இதனால் இறுதி தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏற்கனவே வந்திருந்த அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story