திருப்புவனம் அருகே கிடாய்கள் முட்டு திருவிழா
திருப்புவனம் அருகே 270 கிடாய்கள் பங்கேற்ற கிடாய் முட்டு திருவிழா நடந்தது
திருப்புவனம்
திருப்புவனம் அருகே 270 கிடாய்கள் பங்கேற்ற கிடாய் முட்டு திருவிழா நடந்தது.
கிடாய் முட்டு திருவிழா
திருப்புவனம் அருகே உள்ள பொட்டப்பாளையம் கிராமத்தில் மந்தையம்மன் கோவில் உற்சவத்தை முன்னிட்டு கிடாய் முட்டு திருவிழா உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி நடைபெற்றது.
கிடாய் முட்டு போட்டியில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 135 ஜோடிகள் என 270 கிடாய்கள் கலந்து கொண்டன. கிடாய் முட்டு திருவிழா போட்டியை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொட்டப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தி பிச்சை, ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிகள் நடைபெற்ற பெரிய திடல் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. கிடாய்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் பயங்கரமாக முட்டிக்கொண்டன.
கிடாய்கள் முட்டிக்கொள்கின்றதை பொறுத்து வெற்றி, தோல்வி, சமன் என தெரிவித்தனர்.
பரிசுகள்
வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பெரிய ஸ்டீல் பீரோ, கட்டில், குத்துவிளக்கு போன்றவைகளும், சமனில் முடிந்த கிடாய்களுக்கு பித்தளை அண்டாக்களும் பரிசாக வழங்கப்பட்டது.
இது தவிர போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கிடாய்களுக்கும் சில்வர் பானையும், கேடயமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக கொந்தகை கால்நடை உதவி மருத்துவர் பவித்ரன் மற்றும் கால்நடை ஆய்வாளர், உதவியாளர் ஆகியோர் கிடாய்களுக்கு உடல் தகுதி சோதனை செய்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை முத்துப்பாண்டி, நாகமணி தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். கிடாய் முட்டு போட்டிகளை சுமார் 800-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.