கே.எம்.ஜி. கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் விழா
கே.எம்.ஜி. கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் விழா நடந்தது.
கே.வி.குப்பம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில் "கே.எம்.ஜி.சந்தை" விழா நடைபெற்றது. விழாவை கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.எம்.கோவிந்தராசனாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி, மாணவ-மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் மு.செந்தில்ராஜ் வரவேற்றார். தொழில்முனைவோருக்கு சந்தைப்படுத்துதல், திறன் மேம்படுத்துதல் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று கைவினைப் பொருட்கள், உணவுப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள், இயற்கை உணவு பொருட்கள், சிறுதானிய உணவுகள், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் என 50-க்கும் மேற்பட்ட கடைகளில் தங்களின் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் இதில் பங்கேற்றனர். மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இது அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சி.காமராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வணிக ஆள்முறையியல் துறைத் தலைவர் ர.மணிகண்டன், துறைப் பேராசிரியர்கள், தொழில் முனைவோர் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.