'கொடைக்கானல் மலர் கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு'


கொடைக்கானல் மலர் கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
x
தினத்தந்தி 29 May 2023 12:30 AM IST (Updated: 29 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘கொடைக்கானல் மலர் கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது’ என்று தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறினார்.

திண்டுக்கல்

பரிசளிப்பு விழா

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 2-ந்தேதி வரை கோடைவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்்தனர்.

மேலும் வீடுகளில் சிறந்த ரோஜா தோட்டங்கள், வீட்டுத் தோட்டங்கள் காய்கறி தோட்டங்கள், பசுமைப்புல் தரைகள் அமைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பிரையண்ட் பூங்காவில் நேற்று நடைபெற்றது.

விழாவில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, நடிகர் ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினர்.

விளையாட்டு போட்டிகள்

இதைத்தொடர்ந்து சிறுவர்களுக்கான சாக்கு போட்டியில் மதுரையைச் சேர்ந்த முகமது சுகைல் முதலிடத்தையும், சிறுமிகள் பிரிவில் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சுகைனா பாத்திமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதேபோல் ஆண்களுக்கான மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டியில் கொடைக்கானலை சேர்ந்த ஆசிக், சிறுவர்கள் பிரிவில் கம்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் முதல் இடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) சுதா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் 2 நாட்கள் நீடிப்பு

விழாவில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி பேசுகையில், வழக்கமாக பிரயண்ட் பூங்காவில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 60-ம் ஆண்டு என்பதை கருத்தில் கொண்டு ஏராளமான மலர் செடிகள் வைத்து பராமரித்து வருகிறோம். மலர் கண்காட்சியை காண, கடந்த 3 நாட்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு மேல் வருகை புரிந்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், இந்த மலர் கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீடிக்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர்கள் சிவபாலன், பார்த்தசாரதி, ராஜேஸ்வரி, வனத்துறை அலுவலர்கள் முத்துராமலிங்கம், ஜெயசுந்தரம், கார்த்திக், உதவி சுற்றுலா அலுவலர்கள் முத்துசாமி, காமராஜ் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story