கொடைக்கானல் நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணி
பயோ பிளாக் கற்கள் மூலம் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியை அழகுப்படுத்தவும், தண்ணீரை தூய்மைப்படுத்தவும் கடந்த ஆண்டு ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஏரியில் உள்ள நீரை பயோ பிளாக் கற்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற் கட்டமாக 400 பயோ பிளாக் கற்கள் வாங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நட்சத்திர ஏரியில் தண்ணீரை தூய்மைப்படுத்துவதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து தனியார் ஏஜென்சி மூலம் பயோ பிளாக் மூலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவை சேலத்தில் சிறு துண்டுகளாக மாற்றி நட்சத்திர ஏரிக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த கற்கள் மூலம் தண்ணீரில் உள்ள தேவையற்ற கழிவுகள், நச்சுப் பொருட்கள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நடைபெற்ற சோதனை முயற்சியில் ஜிம்கானா பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் ஏரி நீர் நிரப்பட்டது. அந்த நீரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பயோ பிளாக் கற்கள் ேபாடப்பட்டது. தற்போது அந்த தொட்டியில் உள்ள தண்ணீர் தூய்மையாக மாறி உள்ளது. சுமார் 16 ஆயிரம் பயோ பிளாக் கற்கள் மூலம் ஏரியில் பல்வேறு இடங்களில் போடப்பட இருக்கிறது. இந்தியாவிலேயே நட்சத்திர ஏரியில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஆக்சிஜன் மூலம் தண்ணீரை தூய்மைப்படுத்தும் எந்திரம் 4 இடங்களில் தண்ணீருக்குள் அமைக்க வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர்.