கோடநாடு வழக்கு - விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி முருகவேல் நியமனம்


கோடநாடு வழக்கு - விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி முருகவேல் நியமனம்
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 24.4.2017-ந் தேதி எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வழக்கை தீர விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வர கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மாத இறுதியில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளனர். கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொலை நடைபெற்ற இடத்தில் மீண்டும் நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் வழக்கு மீண்டும் சூடுபிடித்து உள்ளது.

மேலும் கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது இல்லத்திற்கு சென்று விசாரிக்க உள்ளதாகவும், கனகராஜ் வாகன விபத்து தொடர்பாக சேலத்தில் விசாரணை செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story