சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு


சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு
x
திருப்பூர்


தாராபுரம் அருகே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

நகை அடகு கடை மோசடி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு விவரம் வருமாறு:-

திருப்பூர் பல்லடம் ரோடு வாய்க்கால்மேடு பாரியூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து உரிய பணத்தை திருப்பி செலுத்தினோம். நகையை மீட்க சென்றபோது நகைக்கடையை மூடிவிட்டு மோசடி செய்து தலைமறைவாகி விட்டார். இவர் வீரபாண்டி பிரிவிலும் நகை அடகு கடை வைத்து இருந்தார். அங்கும் இதுபோல் நகை அடகு வைத்திருந்தவர்களை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நகையை மீட்டுக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் அளித்த மனுவில், 'கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,600 முதல் ரூ.3,500 வரை கொடுக்கிறார்கள். ரூ.1,000 போதுமானதாக இல்லை. இதனால் மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு

தாராபுரம் சின்னக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். விவசாயமே பிரதான தொழிலாகும். எங்கள் பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. 1½ லட்சம் முட்டையிடும் தாய் கோழி வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் கோழி வளர்ப்புக்கு பண்ணை தயாராகி வருகிறது. ஏற்கனவே உள்ள இந்த பண்ணையால் ஈக்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது. கோழி எச்சத்தை நிலத்தில் கொட்டி வைப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இந்த கோழிப்பண்ணைக்கு அருகில் பள்ளி உள்ளது. சுகாதார சீர்கேட்டால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும், சுகாதாரத்துறையிலும் உரிய அனுமதி பெறாமல் இயக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு 4 வாரத்துக்குள் உரிய பதில் அளிக்குமாறும் கலெக்டர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Next Story