கறிக்கோழி உற்பத்தி 25 சதவீதம் குறைப்பு


கறிக்கோழி உற்பத்தி 25 சதவீதம் குறைப்பு
x
திருப்பூர்


மக்காச்சோளம் விலை உயர்வால் பல்லடத்தில் கறிக்கோழி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

கறிக்கோழி பண்ணைகள்

பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக கோழிப்பண்ணை முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத்தொழில் 2 வகையானது. முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழி வகையாகும். பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் கொள்முதல்விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கேரளா, கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டது.

விலை வீழ்ச்சி

மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் கறிக்கோழி 1 கிலோ கொள்முதல் விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் ரூ.66 ஆக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.90 வரை செலவாகும் நிலையில், விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கறிக்கோழி பண்ணையாளர்கள் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்தனர். இதையடுத்து கறிக்கோழி கொள்முதல் விலை மெல்ல உயர்ந்து வருகிறது.

25 சதவீதம் உற்பத்தி குறைப்பு

இதுகுறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

மழை குறைவு, ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் மாற்றுத்தொழிலாக கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறோம். இதில் நாங்கள் மட்டும் பயன்பெறவில்லை. பண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் சோளம், ராகி, பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலாளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும், பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மழை, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தீவன தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது.

சென்ற ஜூலை மாதத்தில் கறிக்கோழி 1 கிலோ கொள்முதல் விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ரூ.66 ஆக வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் கறிக்கோழி உற்பத்தியை 25 சதவீதம் வரை குறைத்தோம். இதையடுத்து விலை மெல்ல சீராகி வருகிறது. இன்றைய கொள்முதல் விலை ரூ.88 ஆக உள்ளது.

மேலும் கோழித்தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து வருகிறது. சென்ற மாதத்தில் மூட்டை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில், தற்போது மூட்டை ரூ.2ஆயிரத்து 700 ஆக விற்பனையாகிறது. தமிழகத்தில் மக்காச்சோளம் விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம்.

தீவனம் விலை உயர்வு

இதனால் விலையும் அதிகம், போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், மக்காச்சோள விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதேபோல கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கின் விலை தற்போது ரூ.70 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன், லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும், 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கறிக்கோழி தீவனமான சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவை மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கோழிப்பண்ணையாளர்களுக்கு கவலையளிக்கிறது. மேலும் கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரிக்கிறது.

எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே அவைகளின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ெரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ெரயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன்முலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளைக்கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story