கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி  பலியான 6 பேர் குடும்பத்திற்கு   தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான 6 பேர் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

தூத்துக்குடி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான 6 ேபர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

ஆற்றில் மூழ்கி பலி

தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (38), அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ் (36), தாவிதுராஜ் (30) உள்ளிட்ட 57 பேர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா கோவிலுக்கு ஒரு பேருந்தில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் கடந்த திங்கள்கிழமை காலையில் பூண்டி மாதா கோவில் அருகே உள்ள செங்கரையூர் பாலம் அருகே பஸ்சை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து உள்ளனர்.

அப்போது ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் 6 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இவர்கள் 6 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி சார்லஸ், பிரதிவ்ராஜ், தாவிதுராஜ், ஹெர்பல், பிரவீன்ராஜ், ஈசாக் ஆகிய 6 பேர் உடல்களையும் மீட்டனர்.

முதல்-அமைச்சர் இரங்கல்

தொடர்ந்து உடல்கள் திருவையாறு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான சிலுவைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டன. உறவினர்கள், ஊர்மக்கள் இணைந்து கண்ணீர் மல்க உடல்களை பெற்று அடக்கம் செய்தனர்.

இந்த குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் 6 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

அமைச்சர் நிவாரண உதவி

இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் சிலுவைப்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று ஆற்றில் மூழ்கி பலியான 6 பேரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. மாப்பிளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணகுமார், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story