அண்ணியை தாக்கிய கொழுந்தன் கைது
அண்ணியை தாக்கிய கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வெற்றிச்செல்வன் மனைவி ரேணுகாதேவி(வயது 50). கணவன்-மனைவி இருவருமாக இணைந்து டீக்கடை நடத்தி வருகின்றனர். அந்த கடை அருகிலேயே ரேணுகா தேவியின் கணவர் வெற்றிச்செல்வனின் தம்பி தமிழ்ச்செல்வன் (53) டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வடை சுடுவதற்கு மாவு வாங்கி வந்த வெற்றிச்செல்வனை பார்த்து தமிழ்ச்செல்வன் இவனால் தான் தனக்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட ரேணுகா தேவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு பைபால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தடுத்தபோது கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவத்தில் காயமடைந்த ரேணுகாதேவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ரேணுகாதேவி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.