கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம்
கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை,
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது கூடலழகர் பெருமாள் கோவில். இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது ஸ்தலமாக திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வியூகசுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அங்கிருந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் கிளம்பி தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் உதவி கமிஷனர் செல்வி தலைமையில் கோவில் பணியாளர்கள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.