கொப்பரையை அரசு கொள்முதல் செய்யவேண்டும்
உடுமலை:
கொப்பரைக்கான விலையை கிலோ ரூ.140 ஆக நிர்ணயம் செய்து அரசால் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உடுமலையில் நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னை விவசாயிகள் கூட்டம்
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பு பேரவைக்கூட்டம் உடுமலை ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஏ.ராஜகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட செயலாளர் ஆர்.குமார் வாழ்த்திப்பேசினார். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் ஏ.விஜயமுருகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவராக உடுக்கம்பாளையம் எஸ்.பரமசிவம், செயலாளராக டி.அருண்பிரகாஷ், பொருளாளராக லெனின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில ்ஸ்ரீதர் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் கொப்பரை விலையை கிலோரூ.140 என்று நிர்ணயம் செய்து, அரசால் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் முழு தேங்காய் கொள்முதல் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு தேங்காய் எண்ணெய்க்கு விதித்த வரியை நீக்க வேண்டும். பாமாயில் உள்ளிட்ட உணவு எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிதிக்க வேண்டும். காயர் ஏற்றுமதி தொழிலுக்கு கண்டெய்னர் கிடைக்காததால் தேங்காய் ஒன்றுக்கு ரூ.2.50 விலையை குறைந்துள்ளது. எனவே, மத்திய அரசு தட்டுப்பாடின்றி கண்டெய்னர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மாநில மாநாடு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உற்பத்தி செய்யப்படும் தென்னை டானிக் அனைத்து வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகங்களிலும் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரியம் கோவையிலிருந்து செயல்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாட்டை வருகிற 30-ந்தேதி உடுமலை வாணி மகாலில் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.