6 அடி உயரமுள்ள கோரைபுற்கள் அழிப்பு
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 6 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள கோரைப்புற்களை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்கப்பட்டது.
கோரை புற்கள்
வெள்ளகோவிலில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் எதிரில் 2 ஏக்கர் பரப்பளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் சம்பை புல் என்ற கோரைப்புற்கள் 6 அடி உள்ளது. கோரைபுற்களின் பஞ்சுகள் காற்றில் பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்துடன் கீேழ விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளில் குடியிருக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து கோரை புற்களை அகற்ற வேண்டும் என்று நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் அந்தப் புற்களை அகற்ற நடவடிக்கை எடுத்தது. ஆனால் அந்த பகுதிக்குள் மழைநீர் அதிக நாட்களாக தேங்கி இருப்பதால் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக இருந்தது.
டிரோன்கள் மூலம் அழிப்பு
இதனால் நகராட்சி நிர்வாகம் புதிய முயற்சியாக டிரோன் கருவி மூலம் மருந்து தெளித்து கோரை புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் மோகன் குமார் நகராட்சி தலைவர் கனியரசி முத்துகுமார், நகராட்சி பொறியாளர் மணி துப்புரவு ஆய்வாளர் சரவணன், தி.மு.க. திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் ராசி முத்துக்குமார் உள்பட்டோர் பார்வையிட்டனர்.