அதிகரிக்கும் கொசுக்கள்; நோய்கள் பரவும் அபாயம்
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்கள்
சின்ன உருவம்.பெரிய தொல்லை என்பது கொசுக்களைப் பற்றி அனைவரும் உச்சரிக்கும் வார்த்தையாகும். ஆண்டு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத பெரும் சக்தியாக கொசுக்கள் உலா வருகிறது என்றால் அது மிகையாகாது. அதிலும் மழைக்காலம் தொடங்கி விட்டால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காக அதிகரித்து பலருடைய தூக்கத்தை தொலைத்து விடும் நிலை ஏற்படுகிறது.
அந்தவகையில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் தற்போது கொசு உற்பத்தியால் டெங்கு, மலேரியா, யானைக்கால் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் நிலை உள்ளது. கொசுக்களைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை.
இனப்பெருக்கம்
பல கிராமங்களில் தினசரி தண்ணீர் விநியோகம் இல்லாத நிலையில் தொட்டிகளிலும் பாத்திரங்களிலும் தண்ணீரை பிடித்து இருப்பு வைக்கின்றனர். இவ்வாறு திறந்த நிலையில் இருப்பு வைக்கப்படும் தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன. மேலும் ரோட்டில் வீசப்படும் குப்பைக் கழிவுகளுடன் கலந்துள்ள பாலிதீன் கவர்களில் தேங்கும் மழை நீரிலும், வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீர், பழைய டயர்கள், தேங்காய் தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் மழைநீர் ஆகியவற்றிலும் இவ்வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
இதுதவிர தூர் வாரப்படாத சாக்கடைக் கால்வாய்கள், தேங்கும் கழிவுநீர் என பலவகைகளில் கொசு உற்பத்தி நடைபெறுகிறது.
எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல், சுகாதாரமான சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் கொசு உற்பத்தியாவதற்கான சூழல் ஏற்படாமல் தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியமாகும்.நோய்களைப் பரப்பும் தூதுவனாக செயல்படும் கொசுக்களிடமிருந்து தப்பிக்க அனைத்து தரப்பினர் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.