கோட்டார்புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கோட்டார்புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10 நாள் திருவிழா

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது. கி.பி.1542 முதல் 1552-ம் ஆண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் சவேரியார் கோட்டாரில் தங்கியிருந்து சாதி, சமய பேதமின்றி நற்செய்தி பணியாற்றியதாகவும், இங்கு அவரே புனித ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பி, தனது புனிதமிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி முதல் நாள் திருவிழாவான நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலியை ராஜாவூர் பங்கு இறைமக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு இறைமக்களும் சிறப்பித்தனர்.

ஊர்வலம்

மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கொடிபட்டத்தில் கட்டுவதற்கான மலர்களை ராஜாவூர் மக்களும், அருகுவிளை மக்களும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோட்டார் வடக்கு ஊர் மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகள் அவரிடம் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் ஹிலேரியஸ் புனித சவேரியார் உருவத்துடன் கூடிய மற்றும் திருசிலுவை (குருசு) கொடிகளை மந்திரித்து தெற்கு ஊர் தலைவர் ஜஸ்டின், வடக்கு ஊர் தலைவர் ஜேசுராஜ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இதேபோல் கொடியேற்றத்துக்கான மலர்கள் தெற்கு ஊர் செயலாளர் ராஜன், வடக்கு ஊர் செயலாளர் கிங்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கொடியேற்றம்

பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்தது. குருகுலமுதல்வர் ஹிலேரியஸ் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேராலய மணி ஒலிக்கப்பட்டது. சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. மலர்களைத் தூவி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து முதல்நாள் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியை ஹிலேரியஸ் தலைமையில் கோட்டார் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் சகாய ஆனந்த், பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், முன்னாள் பங்குத் தந்தை குணபால் ஆராச்சி, மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் செய்திருந்தனர். கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலியில் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

முதல்நாள் திருப்பலியை குமரி மாவட்ட காவல்துறையினர் சிறப்பித்தனர். திருப்பலி முடிந்த பிறகு காவல்துறை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஏழை, எளியவர்களுக்கு காவல்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் ஒவ்வொரு நாள் விழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெறுகிறது. 4-வது நாள் திருவிழாவான 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, காலை 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது. முதல் திருவிருந்து திருப்பலியில் ஏராளமான சிறுவர்- சிறுமிகள் முதல் திருவிருந்து பெறுகிறார்கள்.

தேர்ப்பவனி

8-வது நாள் திருவிழாவான வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

10-ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழாத் திருப்பலியை ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேர்ப்பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. கொரோனா அபாயம் நீங்கியதின் காரணமாக இந்த ஆண்டு வழக்கமாக தேர்ப்பவனி செல்லும் இடங்களில் தேர்ப்பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story