கோத்தகிரி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி


கோத்தகிரி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில்   கேரட் கொள்முதல் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 Sept 2022 12:30 AM IST (Updated: 16 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அறுவடைக்கு தயார்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை மற்றும் இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கேரட்டிற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலைக் கிடைத்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் தங்களது தோட்டங்களில் கேரட்டைப் பயிரிட்டனர். கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் தற்போது கேரட் கொள்முதல் விலை கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யபடுகிறது. கொள்முதல் விலை உயர்ந்து வருவதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமாக லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- ஒரு ஏக்கர் பயிரிட சுமார் ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படுகிறது. சாதாரண விதைகள் கிலோ ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயும், ஹைப்ரிட் விதைகள் ரூ.50 ஆயிரம் வரையும் விற்கப்படுகிறது. நந்தினி, ரொமான்ஸ், போர்ட் எப் போன், ஜிவேரா உள்ளிட்ட பல்வேறு ரக கேரட் விதைகள் உள்ளன. ஒரு ஏக்கரில் பயிரிட்டு அறுவடை செய்ய தொழிலாளர் சம்பளம், விதை, உரம், மருந்து உள்ளிட்டவைகளுக்கு என சுமார் ரூ.1½ லட்சம் செலவாகிறது.

கணிசமான லாபம்

ஒரு ஏக்கரில் அறுவடை செய்தால் சுமார் 60 முதல் 80 முட்டைகள் கிடைக்கும். நல்ல விளைச்சல் ஆக இருப்பின் 100 மூட்டை கேரட் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள் விளை நிலங்களுக்கே வந்து நல்ல கொள்முதல் விலை தந்து, அவர்களே அறுவடை செய்து கேரட்டை கொண்டுச் செல்கின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவும் குறைகிறது. அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த முறை கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story