கொத்தனாருக்கு 40 ஆண்டு சிறை
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கொத்தனாருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு உதவிய பெண்ணுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
15 வயது சிறுமி பலாத்காரம்
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 32). கொத்தனார். திண்டுக்கல் சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவிதா (37). இவர், சித்தாள் வேலை செய்து வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு, 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று வினோத் பாலியல் பலாத்காரம் செய்தார். அவருக்கு கவிதா உடந்தையாக இருந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
40 ஆண்டுகள் சிறை
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவருக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். இதையடுத்து 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மற்றொரு வழக்கு
இதேபோல் பழனியை அடுத்த சண்முகநதி பகுதியை சேர்ந்தவர் சுல்தான் மைதீன் (35). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இவர், தனது கடைக்கு வந்த 22 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து பழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுல்தான் மைதீனை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுல்தான் மைதீனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.