கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது


கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது
x

கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள சாந்திவீரன் கோவில் திருவிழாவையொட்டி வருகிற 3-ந்தேதி (நாளை) எருது கட்டும் விழா நடக்கிறது.

இந்த விழாவில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என்றும் அமைதியான முறையில் எருதுகட்டு விழாவை நடத்த இடையூறாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் பாலசுந்தரம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அந்த கோவிலின் தற்போதைய நிர்வாக அதிகாரி தரப்பில், இங்கு யாருக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது.

முடிவில், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. முதன்மையானவர்களை போல யாரும் செயல்படக்கூடாது. அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். இதனை சிவகங்கை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதேபோல சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டியில் உள்ள சின்னசந்திவீரன், பெரிய சந்திவீரன் கோவில் திருவிழாவையொட்டி நாளை (3-ந்தேதி) நடக்கும் திருவிழாவிலும் முதல் மரியாதை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடக்கோரி பாலசுப்பிரமணியம் சார்பில் வக்கீல்கள் ஜெயகுமரன், எம்.சுரேஷ் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இதே நீதிபதி விசாரித்து, முதல் மரியாதை உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கக்கூடாது என உத்தரவிட்டார்.


Next Story