ஏழுமலையான் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஏழுமலையான் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் பக்தர்கள் வந்தனர்.
தென்திருப்பதி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறப்பு பஸ்கள்
இதற்காக வெள்ளிக்கிழமை இரவே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவார்கள். பின்னர் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் விடிய விடிய மலையேறிச் சென்று தேங்காய், பழம் கலந்த அவுளை ஏழுமலையானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள்.
இதில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரையிலும் வனப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பாதுகாப்போடு வந்து செல்வதற்கு ஏதுவாக வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது வருடந்தோறும் நடைபெற்று வருகின்ற வழக்கமான நிகழ்வாகும்.
மாட்டு வண்டிகளில்...
அந்த வகையில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று மாலை முதலே பக்தர்கள் மாட்டு வண்டிகள், பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பாதை யாத்திரையாகவும் மலை அடிவாரப்பகுதிக்கு வந்தனர்.பின்னர் உற்சாகத்தோடு ஏழுமலையானின் நாமத்தை உச்சரித்தவாறு செல்போனில் பக்தி பாடல்களை கேட்டுக் கொண்டு இரவோடு இரவாக மலை ஏறி சென்று ஏழுமலையானை வழிபாடு செய்தனர். இதனால் உடுமலை- மூணாறு சாலை மலையடிவாரப்பகுதியில் பக்தர்கள் மற்றும் வாகனங்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் நேற்று மாலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.