ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோபி
ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் நேற்று ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள மரகதீஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர் அன்னம் மற்றும் காய்கறிகள், முறுக்கு மற்றும் பழங்களால் மரகதீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் கோபி, மொடச்சூர், நாயக்கன் காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மேலும் கோபி அருகே காசிபாளையத்தில் உள்ள மூன்று முகத்து வேலாயுத சாமி கோவிலில் உள்ள சிவகுருநாதர், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சாமி கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், கோபி பாரியூர் அமர பணீஸ்வரர் கோவில். கோபி வாய்க்கால் ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. கோபி மாதேசியப்பன் கோவில் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாபேட்டை
இதேபோல் அம்மாபேட்டை காவிரியின் வலது கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சொக்கநாத சாமிக்கு 75 படி பச்சரிசி சாதத்தால் அன்னலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பல வகையான நாட்டு காய்கறிகள், கனிகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் சிறப்பு அலங்கார, ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து சொக்கநாத சாமி தலை மேல் போர்த்தப்பட்டிருந்த சாதத்தை எடுத்து கோவிலை வலம் வந்து காவிரியில் உள்ள ஜீவராசிகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காவிரியில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு சிவனின் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் பஞ்சகாவியம், பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், கரும்பு சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அம்மாபேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
சிவகிரி
சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6 மணி அளவில் மூலவருக்கு பலவிதமான நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லிங்கம் முழுவதும் 10 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம் சார்த்தப்பட்டு, காய், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு 7 மணி அளவில் சுமங்கலி பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் காவிரிக்கரையில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ராகு கேது தலம் என அழைக்கப்படும் நாகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் தொந்தளம் நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று மாலை 6 மணி அளவில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பச்சரிசி சாதத்தால் சாமிக்கு அன்னாபிஷேகம் அலங்காரம் மற்றும் காய்கறிகள், பழங்கள் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் உண்ணாமலை அம்மனுக்கும் கனி அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து இரவு அன்னதானமும் நடந்தது.
இதேபோல் காந்திபுரம் மருந்தீஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. ஜப்பசி மாத பவுர்ணமியையொட்டி மகுடேஸ்வரருக்கும், சவுந்தர நாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவரான மகுடேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரங்களை பிரபு குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். பின்னர் மாலையில் ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி யுவராஜ் செய்திருந்தார்.