ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா; நாளை மறுநாள் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது
ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
குண்டம் விழா
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன் மற்றும் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி இரவு 8 மணிக்கு 2 கோவில்களின் முன்பும் கம்பங்கள் நடப்படுகிறது. இந்த கம்பத்திற்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபடுவார்கள். வருகிற 11-ந்தேதி காலை 9 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். அதைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நடக்கிறது.
கம்பம் பிடுங்கும் விழா
வருகிற 12-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவில் கரகம் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி பகல் 11 மணிக்கு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். 14-ந்தேதி இரவில் கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது.
அப்போது கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. 15-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல், சாமி திருவீதி உலாவும் இரவு 7 மணிக்கு சாமி திருக்கோவில் நிலை சேருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.