மரகத நடராஜர் சந்தனகாப்பு களையும் ஆருத்ரா தரிசனம்


மரகத நடராஜர் சந்தனகாப்பு களையும் ஆருத்ரா தரிசனம்
x

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.

ராமநாதபுரம்


திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.

பூலோகத்தில் தோன்றிய முதல்கோவில்

ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். பூலோகத்தில் தோன்றிய முதல் கோவிலான இங்கு மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

சந்தனகாப்பு

வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.

ஏற்பாடு

பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story