அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோபி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோபி அருகே மூல வாய்க்காலில் உள்ள மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு காலை 7 மணி அளவில் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
கோபி
அதைத்தொடர்ந்து வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோபி, புதுவள்ளியம்பாளையம், கரடிட்டடிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், கோபிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், கோபி கடை வீதியில் உள்ள ஆஞ்சநேயர், கோபி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், கோபி மொடச்சூர் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. கோபி, கூகலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
சென்னிமலை
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி செல்வ ஆஞ்சநேயருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் போன்ற பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு செல்வ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி கரிவரதராஜபெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், அண்ணாநகர் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ அஷ்ட ஆஞ்சநேயருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தாணி கைகாட்டி பிரிவில் உள்ள 35 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையத்தில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான ஆஞ்சநேயருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலை மற்றும் வெற்றிலை மாலை, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டன. அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில் மற்றும் அருகில் உள்ள கொந்தளம் நாகேஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. இதேபோல் வடக்கு புதுப்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே சிறப்பு அலங்காரமும், மதியம் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரமும் செய்யப்பட்டது.
அப்போது "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தர்களின் கோஷத்துக்கிடையே மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொளாநல்லி ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதி காவிரி கரையில் அமைந்துள்ள ஜெய் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி ஜெய் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பஞ்சகாவியம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவகிரி
சிவகிரி அருகே தலையநல்லூரில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சியில் சஞ்சீவராயன் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா ஆஞ்சநேயருக்கு முழு சந்தனகாகாப்பு பூசப்பட்டு 108 வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆஞ்சநேயரை தரிசிக்க அத்தாணி, பெருமுகை, கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், கோபி உள்ளிட்ட டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கடைவீதியில் பழமையான கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கருட ஸ்தம்பம் 80 அடி உயரமாகும். இங்கு அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூல மந்திர ஜெபம், மூல மந்திர ஓமம் நடைபெற்றது. காலை 7.30 மணி அளவில் உற்சவர், மூலவர் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு மகா தீபாராதனை, சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மதியம் 2 மணி அளவில் சாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு மகா அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.